ரஜினிகாந்தின் வீடியோ உரை, மன்றத்தினருக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது. அதில், ‘மற்ற மாநிலங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு நாம் சாதிக்க வேண்டும்’ என்றார்.
ரஜினிகாந்த், தனிக் கட்சி தொடங்க இருப்பதையும் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதையும் ஏற்கனவே அறிவித்தார். அதைத் தொடர்ந்து ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றம் என பெயர் மாற்றினார். ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் மக்கள் மன்றக் கூட்டங்களின்போது அந்தந்த மாவட்டங்களுக்காக நிர்வாகிகள் நியமனம் செய்து வருகின்றனர். முன்பு ரசிகர் மன்றமாக இருந்தபோது, ‘மாவட்டத் தலைவர்’ என்கிற பதவி ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய பதவியாக இருந்தது. தற்போது மக்கள் மன்றத்தில், ‘மாவட்டச் செயலாளர்’ பதவியே பெரிய பதவி! பெரும்பாலும் ரசிகர் மன்றத்தில் மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்கள், மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளர் பொறுப்பை கைப்பற்றி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் ரஜினிகாந்தின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரையை ஒளிபரப்பினார்கள். அந்த உரை வருமாறு : ‘இது ஒரு பகிரத பிரயத்தனம். மிகவும் கடினமான வேலை. ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்டுப்பாடாக இருந்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்கலாம். நம் இதயத்தை, எண்ணங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு பொதுநலம், சுயநலம் கிடையாது.
இந்த பொதுநலத்தை நோக்கி எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் நமது நோக்கம். தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை, நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மற்ற மாநிலங்கள் எல்லாம் நம்மை பார்த்து ‘இப்படியா?’ என்று ஆச்சரியமாக கேட்கும் அளவுக்கு நாம் சாதித்து காட்ட வேண்டும்.
இது ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பு. அதை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதனுடனே முக்கியமாக குடும்பம், நமது தாய்-தந்தையை நல்லபடியாக கவனித்து கொள்ள வேண்டும். குடும்பத்தை விட்டு விட்டு இதை செய்து காட்டுங்கள் என்று நான் சொல்லவே மாட்டேன். அப்படி வந்தாலும் எனக்கு பிடிக்காது. வீட்டை நாம் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் வீடு, அப்புறம் தான் நாடு.
அரசியல், பொதுநலம் என்று வரும்போது ‘நமக்கு பதவி கிடைக்கவில்லையே...’ எனும் பொறாமை நம்மிடம் இருக்கக்கூடாது. எல்லாமே ஒரு நல்ல காரியத்துக்காக வரவேண்டும். தலைமை எல்லாவற்றையும் பார்த்து ஒரு நல்ல முடிவு எடுக்கும். பதவி என்பது பெரிய விஷயம் என்று நினைத்து விடக்கூடாது.
நமக்குள்ளே ஏதாவது சண்டை மற்றும் மனஸ்தாபங்கள் வருகிறதா? என்று அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது. எல்லோரும் நல்ல மனதுடன், நல்ல எண்ணத்துடன் ஆண்டவனை வேண்டி இந்த காரியத்தில் நாம் இறங்கி இருக்கிறோம். இதில் எல்லோரும் உங்களது 100 சதவீத ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நீங்கள் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு இதை நீங்கள் சிறப்பாக காட்டுங்கள். அந்த ஆண்டவன் இருக்கிறான். நான் இருக்கிறேன்.’ இவ்வாறு ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த் உடனடியாக மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்யும் சூழல் இல்லை. அதற்காகவே அவரது உரையை மாவட்டம் வாரியாக போட்டு, மன்றத்தினருக்கு அறிவுரைகள் வழங்குவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.