நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஆக்ஸிஜன் தடுப்பாடும் நிலவுகிறது. இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் உயிர் காக்க பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று அரசியல் கட்சிகள், சினிமா நடிகர்கள், பிரபலங்கள், தனி நபர்கள் என பலரும் நிதி அளித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்தார். படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ரஜினிகாந்த் ஐதராபத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சத்துகான காசோலையை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியதாகத் தெரிவித்தார். கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோயை ஒழிக்க அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் கரோனா எனும் நோயைக் கட்டுப்படுத்த முடியும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா அவரது கணவர் விசாகன் மே 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"