இந்தி எதிர்ப்பு கொள்கையை முன்னிறுத்தும் அரசான திமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பவர் ஆளுநர் ஆர்.என். ரவி. அவரை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் தாம் அரசியல் பேசியதாக கூறியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மேலும் மீண்டும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகளும் எழுந்துள்ளன. ஆனால் ரஜினிகாந்த்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் அவர் அரசியலுக்கு வரமாட்டார் எனக் கூறுகின்றன.
எனினும் அவரிடம் வேறு திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ரஜினி, ஆர்என் ரவி சந்திப்பை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், ‘ராஜ் பவனை அரசியல் பவன்’ ஆக ஆர்என் ரவி மாற்ற முயற்சிக்கிறார் என்றார். எனினும் இருவரின் சந்திப்புக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் கே. அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்தும் மத்திய அரசின் அறிவிக்கப்படாத தமிழக தூதர் போலவே நடந்துவருகிறார்.
அந்த வகையில் அவர் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசியிருக்கலாம். மேலும், இந்தச் சந்திப்பு கடந்த 10 நாள்களுக்கு முன்னதாக திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் சந்திக்கும்வரை இது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ரஜினிகாந்த் தனது ட்விட்டர் கணக்கில் தேசியக் கொடியை முகப்பாக வைத்துள்ளார். தனது வீட்டில் தேசியக் கொடியையும் பறக்கவிட்டுள்ளார்.
இதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு தோறும் தேசியக் கொடி பரப்புரையின் (ஹர் கர் திரங்கா) கீழ் ரஜினிகாந்த் சந்தித்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
1996இல் ரஜினிகாந்த், "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” என்றார். அதன்பின்னர் அவர் அரசிலுக்கு வரப்போகிறார் என்ற சப்தம் ஓங்கி ஒலிக்க தொடங்கியது.
பின்னர் நாளடைவில் சற்று ஓய்ந்திருந்த இந்தச் சப்தம், தொடர்ந்து 2014இல் பிரதமர் நரேந்திர மோடி அவரை சந்திக்கையிலும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ரஜினிகாந்த் 'அரசியலுக்கு வருவது உறுதி' என அறிவித்தார். மேலும் 2021 ஜனவரி மாதம் கட்சியும் தொடங்கப்படும் என அறிவித்தார். ஆனால் 2020 டிசம்பரில் உடல் நிலையை காரணம் காட்டி கட்சி அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“