ரஜினி மக்கள் மன்றம் : நடிகர் ரஜினிகாந்த், இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ரஜினியின் இந்த ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் கூட்டம்
ஏற்கனவே தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களின் கூட்டணி, மற்றும் நிலைப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு வரக்கூறி அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
நிர்வாகிகள் வருகை தந்த போது
சென்னை போயஸ்கார்டனில் அமைந்திருக்கும் ரஜினியின் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அதில் போட்டியிடுவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்ப்பட்ட நிர்வாகிகளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : அதிமுகவுடன் பியூஷ் கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
இதில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து 32 மாவட்ட செயலாளர்கள்,தலைமை நிர்வாகி சுதாகர், நீக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 40 பேர் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ரஜினி மக்கள் மன்ற அறிக்கை
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கும் ரஜினிகாந்த் கட்சியின் பெயரையோ, மன்றத்தின் கொடியையோ எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு யார் நிரந்தர தீர்வு தருகின்றார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.