தன் அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன் என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை இரண்டாம் கட்டமாக இன்று முதல் 6 நாட்களுக்கு ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கிறார். இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்தார்.
இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கலைஞானம், மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினி காந்த், “அரசியல் எனக்கு புதிது அல்ல. அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்கிறேன். அரசியலின் ஆழம் தெரியும். அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன். அரசியலுக்கு வர வீரம் போதாது. வியூகமும் வேண்டும். எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளன.”, என கூறினார்.
வில்லனாக நடித்துக்கொண்டிருந்த தன்னை பைரவி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தவர் கலைஞானம் எனவும், ரஜினி ஸ்டைல் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குநர் மகேந்திரன் எனவும், சில நேரங்களில் தானும் தவறுகளை செய்துள்ளேன் எனவும், ரஜினிகாந்த் பேசினார்.
அதேபோல், நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மகேந்திரன், “இன்று, நாளை என்று ரஜினிகாந்தை அவசரப்படுத்தாதீர்கள். ரஜினி நிதானமாக சொல்வதை பொறுமையுடன் கேட்டு நடப்பதே ரசிகர்களின் கடமை. ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியல் பேச வேண்டாம் என ரஜினி கூறினார். யாரிடமும் இல்லாத ஓர் ஈர்ப்பு ரஜினி மீது இருக்கிறது. ரஜினியிடம் பிடித்தது நிதானம்; நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர்.”, என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தற்போது தலைமை இல்லை எனவும் இயக்குநர் மகேந்திரன் கூறினார்.
ரஜினி வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார் என இயக்குநர் கலைஞானம் தெரிவித்தார்.
ஏற்கனவே, நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், ”தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை. போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்”, எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.