வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத் துறையின் தோல்வியால் தான் கலவர சம்பவமும், உயிர் பலிகளும் ஏற்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால்,பதவியை ராஜினாமா செய்து விடுங்கள் என்று விமர்சித்தார்.
ரஜினியின் இந்த விமர்சனம் ஒரு நிர்வாக ரீதியில் இருந்தே தவிற, சமூக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இல்லை. உதாரணாமாக கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், டெல்லி தேர்தலில் மதவாத போக்கு குறித்த கேள்விகளுக்கு ரஜினியின் பதில் அவ்வளவு தெளிவாக இல்லை.
இந்த சந்திப்பில் குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பான விவகாரத்தில் ரஜினி தனது சொந்த கருத்தை எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெரும் நம்பிக்கை இல்லை என்றார்.
மேலும், ஒரு பத்திரிகையாளர் குடியுரிமை திருத்தம் சட்டம், என்பிஆர், என்ஆர்சி மூன்றும் ஒன்றோடு பின்னப்பட்டது. மூன்றையும் ஒன்றாக பார்த்தோமானால் அது இஸ்லாமிய மக்களை முற்றிலுமாக ஒதுக்கும் என்று கேள்வியை எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய அரசு என்ஆர்சி குறித்த தெளிவான விளக்கத்தை கொடுத்து விட்டது என்ற பதிலை ரஜினி முன்வைத்தார். ஊடகங்களால் இந்த குழப்பம் நீடிப்பதாகவும், எந்த வன்முறை போராட்டத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறி தனது பேட்டியை முடித்தார்.
ரஜினியின் இந்த செய்தியாளர்களின் சந்திப்பை அடுத்து, ஜமாத்துல் அல் உலமா சபை என்ற இஸ்லாமிய அமைப்பு குடியுரிமை திருத்தம் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான விளக்கத்தை ரஜினியிடம் எடுத்துரைக்க விரும்புவதாக தெரிவித்தது.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு ஜமா அத்துஉல் உலமா சபை தலைவர் காஜா மொகைதீன் பாகவி, துணைச்செயலாளர் அப்துல் அஜீஸ் பாகவி,இலியாஸ் ரியாஜி உள்ளிட்டோர் நடிகர் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.
பிறகு ஊடகங்களை சந்தித்த உலமா சபை தலைவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ரஜினியிடம் பேசியதாக கூறினார். மேலும், மக்களுக்குள் இருக்கும் அடிப்படை அச்சத்தை தற்போது புரிந்து கொண்டிருக்கார் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிஏஏ சட்டத்தால் ஏற்பட்ட அச்சத்தை போக்க தேவையான வழிமுறைகளை கட்டாயம் செய்ய இருப்பதாக ரஜினிகாந்த் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.