தூத்துக்குடியில் ரஜினிகாந்த் அளித்த பேட்டி சர்ச்சை ஆகியிருக்கிறது. வன்முறைக்கு சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம் என ரஜினிகாந்த் கூறியது சரியா?
தூத்துக்குடியில் ரஜினிகாந்த் அளித்த அந்த சர்ச்சை பேட்டி தொடர்பான ரீயாக்ஷன்களை இங்கே காணலாம்!
கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்: வன்முறையில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என ரஜினி கூறுவதே சமூக விரோத குற்றச்சாட்டு!
டி.கே.எஸ்.இளங்கோவன், செய்தி தொடர்பு செயலாளர், திமுக: துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் யார் சமூக விரோதிகள்? சமூக விரோதிகளாக இருந்தாலும் கைது மட்டுமே செய்திருக்க வேண்டும். பாஜக.வினரும் ரஜினியும் ஒரே குரலில் பேசுவதைப் பார்த்தால், இருவருக்கும் ஒரே இடத்தில் இருந்து உத்தரவு வருவதுபோல இருக்கிறது.
தமிழிசை செளந்தரராஜன், மாநிலத் தலைவர், பாரதீய ஜனதாக் கட்சி: போராட்டங்கள் எச்சரிக்கையோடு நடைபெற வேண்டும் என ரஜினி கூறியதை வரவேற்கிறேன். உண்மை நிலையை விமர்சனங்களையும் மீறி எடுத்துச் சொல்வதே சரி. சமூக விரோதிகள் ஊடுருவியதாக நாங்கள் கூறியபோது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): ரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும். தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா? ரஜினியின் கருத்து ஸ்டெர்லைட் ஆலையின் குரல்!
இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிக்கு நன்றி. ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினியின் கருத்து உள்ளது.
திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி: தூத்துக்குடி வன்முறையில் சமூக விரோதிகளே ஈடுபட்டனர் என ரஜினி கூறுவது, பிரச்சனையை திசை திருப்பும் செயல்.
தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தலைவர், மனிதநேய ஜனநாயகக் கட்சி: போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்துகிறார். எனவே மக்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
சரத்குமார், தலைவர், சமத்துவ மக்கள் கட்சி: சமூக விரோதிகள் ஊடுருவல் என்று ரஜினி கூறியிருப்பது பாஜகவின் எதிரொலியாகவே தோன்றுகிறது. மக்கள் போராட்டத்தை சமூக விரோதிகள் ஊடுருவல் என்பது வேதனையளிக்கிறது. இப்படி கூறியிருப்பதன் அடிப்படை ஆதாரம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.
ரவிகுமார், எழுத்தாளர்: தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற ரஜினிகாந்தின் பேச்சு, ‘தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் அதிகரித்துவிட்டனர்’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதன் எதிரொலியா?