Rajinikanth-MK Stalin condolence to Karunanidhi: கருணாநிதிக்கு மெரினாவில் அஞ்சலி செலுத்த முதல்வர் ஏன் வரவில்லை? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார். மெரினா நினைவிடத்திற்கு எதிராக அரசு அப்பீலுக்கு போயிருந்தால் நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 13) மாலையில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. தென் இந்திய நடிகர் சங்கம் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.
திரளான நடிகர்-நடிகைகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசுகையில், ‘நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை காட்சிக்கு வைக்க வேண்டும்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார். அவர் கூறுகையில், ‘அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை
கருணாநிதியின் இறுதி ஊர்வலக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டேன். தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கின் போது ஏன் தமிழக முதல்வர் இல்லை?
பிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா?’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.