ரஜினி எதிர்ப்பு அரசியல் : மு.க.ஸ்டாலின் - டிடிவி தினகரன் போட்டி

ரஜினிகாந்தை எதிர்ப்பதில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் இடையே போட்டி உருவாகியிருக்கிறது. ரஜினியை எதிர்ப்பதையே பாஜக எதிர்ப்பரசியலாக பார்க்கிறார்கள்.

ச.செல்வராஜ்

ரஜினிகாந்தை எதிர்ப்பதில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் இடையே போட்டி உருவாகியிருக்கிறது. ரஜினியை எதிர்ப்பதையே பாஜக எதிர்ப்பரசியலாக பார்க்கிறார்கள்.

ரஜினிகாந்த் தனிக் கட்சி ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்க இருப்பதாக கூறுகிறார் ரஜினி. ‘தர்மப்படியான நியாயப்படியான அரசியலே ஆன்மீக அரசியல்’ என அதற்கு விளக்கமும் கொடுத்தார் அவர்.

ரஜினிகாந்த் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், அவரது ஆன்மீக அரசியலை ‘பாஜக.வின் பி டீம்’ போலவே தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கருதுகின்றன. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பல்வேறு காலகட்டங்களில் கருத்து கூறியது, தற்போதும் மத்திய அரசு மீது எந்த விமர்சனங்களையும் வைக்காதது ஆகியவையும் ரஜினிகாந்த் மீது பாஜக ஆதரவு முத்திரையை குத்தியிருந்தன.

ரஜினிகாந்த் என்னதான் தனது பாபா முத்திரையில் இருந்து தாமரையை நீக்கினாலும், அவரது அரசியல் நிலைப்பாடு மாறிவிட்டதாக யாரும் நம்பவில்லை. தவிர, ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பை வெளியிட்டதும், சென்னை மைலாப்பூரில் இந்து ஆன்மீக மடம் ஒன்றுக்கு சென்று ஆசி பெற்றுத் திரும்பியது அவரை இன்னமும் அழுத்தமான இந்துத்வா வாதியாக அடையாளப்படுத்தியது. இதை சரிகட்டவே கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்தார் என்போரும் உண்டு.

ரஜினிகாந்த் இப்படி வெளிப்படையாக ஆன்மீக அரசியல் என கருத்து கூறியபிறகும், இடதுசாரிகள் உள்பட எந்தக் கட்சியும் ரஜினிக்கு எதிராக கடுமையான கருத்துகளை கூறவில்லை. பாஜக.வை கடுமையாக எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ‘ஜாதி, மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக ரஜினி கூறியிருக்கிறார். எனவே இது பாஜக.வின் மதவெறி அரசியல் அல்ல’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு, ‘அய்யா வைகுண்டர் முன்னெடுத்தது ஆன்மீக அரசியல்தான். ஆனால் அதில் மதவெறியோ, ஜாதி வெறியோ இல்லை. அதே போன்ற அரசியலை ரஜினி முன்னெடுக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.

தமிழகத்தில் எந்தக் கட்சியுமே ரஜினியை அதிகம் விமர்சிக்க விரும்பாததற்கு பிரதான காரணம், கூட்டணி கணக்குகள்தான். இப்போதைக்கு தமிழகத்தில் திமுக.வை தவிர கூட்டணி சவாரிக்கு தோதான கட்சிகள் எதுவும் இல்லை. திமுக.வால் அனைத்து இதரக் கட்சிகளையும் கூட்டணிப் படகில் ஏற்றிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு கட்சியும் கேட்கிற அளவுக்கு தொகுதிகளை பங்கிட்டு திருப்தி படுத்தவும் முடியாது.

எனவே கூட்டணிக்கு மையமான இன்னொரு சக்தி தமிழகத்தில் தேவைப்படுகிறது. அதற்கு தமிழக ஆட்சியில் இருக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பை நம்ப முடியாது. காரணம், பாஜக தலைமையை மீறி எந்த முடிவையும் அந்தக் கட்சி எடுக்கும் என கூற முடியவில்லை. தவிர, அந்தக் கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகள் மற்றும் தமிழக ஆட்சி மீதான அதிருப்திகளும் பின்னடைவாக அமைகின்றன.

டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி மற்றும் அவரது செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலா தலைமையில் இயங்கும் அந்தக் குழுவுடன் எப்படி அணி அமைப்பது என்கிற தயக்கம் இருக்கிறது.

எனவே திமுக.வை விட்டால், இன்னொரு அணிக்கு தலைமை தாங்கும் அளவில் செல்வாக்கு உள்ளவராக ரஜினியை அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். ஆனால் பாஜக மாடல் அரசியலை ரஜினி பேசுவதால், தமிழகத்தில் எந்தக் கட்சியிலும் இல்லாத பாஜக எதிர்ப்பாளர்கள் ரஜினியை வலுவாக எதிர்க்கும் ஒரு சக்தியை தேடும் சூழல் உருவாகிறது.

ரஜினிக்கும் கோபாலபுரத்திற்கும் இடையிலான நட்பு காரணமாக, ஸ்டாலின் உள்பட திமுக முன்னணி நிர்வாகிகள் யாரும் ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கவில்லை. (ஆனால் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ரஜினியை செமையாக கேலி செய்கிறார்கள்). இந்தச் சூழலில்தான் டிசம்பர் 2-ம் தேதி மாலையில் சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பேட்டியளித்த டிடிவி தினகரன், கட்சி தொடக்க நிகழ்ச்சியில் ரஜினி பேசிய வார்த்தைகளை வரிக்கு வரி விமர்சித்தார்.

‘ஆன்மீகம் என்கிற வார்த்தையை அரசியலில் பேசுவது தவறாகத்தான் போய் முடியும். பாஜக.தான் ஆன்மீகம் என்ற பெயரில் பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினருக்கு எதிராக நிறுத்துகிறது’ என நேரடியாக விமர்சனங்களை வைத்தார் தினகரன். ‘ஆன்மீகத்தின் பெயரால் போலிச்சாமியார்கள் செயல்பட்டதால் தான் பெரியார் போன்றோர் சமூகநீதிக்கொள்கைகளை பேசினர்’ என தன்னை திராவிட இயக்க உணர்வாளராக அந்தப் பேட்டியில் முன்னிறுத்தினார் டிடிவி.தினகரன்.

தொடர்ந்து பேசிய தினகரன், ‘சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்கிறார். சிஸ்டம் என்பது உயிரற்றது. அது சரியாகத்தான் உள்ளது. அதை கையாளக்கூடிய மனிதர்கள் தான் சரியாக இல்லை. ரஜினி புரியாமல் பேசுகிறாரா, அல்லது அவர் பேசுவதை நம்மால்தான் புரிந்து கொள்ள முடியவில்லையா?’ என கமெண்ட் அடித்தார்.

உச்சபட்சமாக, ‘என் வாழ்நாழில் ஒருபோதும் பாஜக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்’ என அந்தப் பேட்டியில் அறிவித்தார் டிடிவி தினகரன். தமிழக அரசியல் களத்தில் 2003-ம் ஆண்டும் மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில் பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ‘பாஜக.வுடன் கூட்டணி அமைத்து ஒருமுறை தவறு செய்தேன். மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டேன்’ என்றார்.

பாஜக.வுடன் நட்புறவை கடைபிடித்தாலும், கடைசி வரை அந்த வாக்குறுதியை கடைபிடித்தார் ஜெயலலிதா. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மேலிடம் எவ்வளவோ முயன்றும், கூட்டணிக்கு ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. அந்த வகையில் டிடிவி தினகரனின் அறிவிப்பை திராவிட சிந்தனையாளர்களும் பாஜக எதிர்ப்பாளர்களும் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு டிவிட்டர் பக்கங்களில், ‘டிடிவி தினகரன் அறிவித்ததைப் போல என் வாழ்நாளில் பாஜக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என அறிவிக்கும் துணிவு வேறு எந்தத் தலைவருக்காவது இருக்கிறதா?’ என மறைமுகமாக ஸ்டாலினை சாடினர். இந்தச் சூழலில்தான் டிசம்பர் 3-ம் தேதி ரஜினிகாந்த் கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்தார்.

ஏற்கனவே மோடி-கருணாநிதி சந்திப்பு காரணமாகவே ஆர்.கே.நகரில் சிறுபான்மை வாக்குகள் திமுக.வுக்கு கிடைக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது. இந்தச் சூழலில் ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்தின் வருகை திமுக.வுக்கு இன்னும் பின்னடைவை உருவாக்கலாம் என பேசப்பட்டது.

ஆனால் ரஜினிகாந்த் – கருணாநிதி சந்திப்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் ‘ஸ்பாட்’டிலேயே ரஜினிக்கு பதிலடி கொடுத்தார். ‘ஆன்மீக அரசியல் எடுபடாது. தமிழகம் திராவிட இயக்க மண். இங்கு திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்து பலரும் தோல்வியையே தழுவியிருக்கிறார்கள்’ என கூறினார் ஸ்டாலின்.

தமிழகத்தில் பாஜக. எதிர்ப்பரசியலை முன்னெடுப்பவர்களுக்கு எப்படி ஒரு தளம் கிடைத்ததோ, அதேபோல இனி ரஜினிகாந்தை எதிர்க்கிறவர்களுக்கு அந்தத் தளம் உருவாகும் சூழல் கனிகிறது. அந்தப் போட்டியில் இப்போதைக்கு ஸ்டாலினும், டிடிவி தினகரனும் முன்னால் நிற்கிறார்கள்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close