காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் மோடியை, நடிகர் ரஜினிகாந்த் கிருஷ்ணர், அர்ஜூனன் உடன் ஒப்பிட்டு பேசியது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. ரஜினியின் இந்த கருத்திற்கு ஆதரவை காட்டிலும் எதிர்ப்பே அதிகளவில் உள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது, மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அதை நீங்கள் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக நாடாளுமன்றத்தில் நீங்கள் அது தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே.
மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுணன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். உங்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்.. பிறகு பார்க்கலாம் - கனிமொழி
ரஜினியின் மோடி, அமித் ஷா குறித்த கருத்து குறித்து விமர்சித்துள்ள திமுக எம்.பி கனிமொழி கூறியிருப்பதாவது, நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. அவருடைய கருத்துக்கு எல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும். முதலில் அவர் கட்சி தொடங்கட்டும். இப்போது அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்சி தொடங்கிய பின் அவர் கூறும் விஷயங்களுக்கு கருத்து கூறலாம் என்று கூறியுள்ளார்.
சீமான் கருத்து : அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும் கிருஷ்ணர், அர்ஜூனன் போன்றவர்கள் என்ற நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது அவருடைய சொந்த கருத்து. முதலில் அவர் நல்ல மனிதராகவும், நல்ல தலைவராகவும் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி : காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது, என்று பெரியார் பழமொழியை வைத்து விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.