ரஜினிகாந்த் மீது திமுக அதிரடி பாய்ச்சல் நடத்தி வருகிறது. ‘டெல்லி டைரக்டர்களின் உத்தரவுப்படி நடிப்பவர்’ என முரசொலியில் விமர்சனம் வைத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் புகுந்திருக்கிறார்கள். இவர்களில் ரஜினிகாந்த் மீது கடந்த இரு தினங்களாக திமுக நாளேடான ‘முரசொலி’ நடத்தி வரும் அதிரடி பாய்ச்சல், அரசியல் வட்டாரங்களில் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
ரஜினிகாந்த் மீதான திமுக.வின் முதல் அட்டாக், மார்ச் 9-ம் தேதியிட்ட முரசொலி இதழில் இடம்பெற்றது. அதில் ‘அந்துமணி-சிந்துமணி’ பகுதியில் பெரியார் சிலை விவகாரத்தில் ரஜினிகாந்த் மிக தாமதமாக ரீயாக்ட் செய்திருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறது.
ரஜினிகாந்த் குறித்து, ‘ஏன் இவ்வளவு லேட்டுன்னு கேட்டால், ‘லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன்’னு டயலாக் பேச ஆரம்பித்துவிடுவார். அவர் எப்போதும் டைரக்டர் சொல்படி நடிப்பவர்! டெல்லி டைரக்டர்களிடம் இருந்து உத்தரவு வர லேட்டாகியிருக்கும்டி’ என அதில் சிந்துமணி பதில் சொல்வதாக இருக்கிறது.
ரஜினிகாந்த் குறித்து அதே நாள் முரசொலியில், ‘தமிழ்நாட்டில் வெற்றிடமாம், தெரியுமா உங்களுக்கு? அதை நிரப்ப ரஜினி வருகிறாராம், இது எப்படி இருக்கு?’ என திராவிட சிந்தனையாளர் க.திருநாவுக்கரசு எழுதிய முழுப் பக்க கட்டுரையும் வந்திருக்கிறது.
‘எம்.ஜி.ஆர். நல்லவரு... கருணாநிதி நல்லவரு... ஜெயலலிதா நல்லவரு! ஏனுங்க ரிப்பேர்காரரே, அப்போ இந்த சிஸ்டத்தை சரியில்லாம ஆக்கியவர் யாருங்கோ!’ என அன்றே இன்னொரு பக்கத்தில் நையாண்டி கருத்தை பதிவு செய்திருக்கிறது முரசொலி.
ரஜினிகாந்த் மார்ச் 10-ம் தேதி அதிகாலையில் இமயமலைக்கு கிளம்பினார். அதே நாளில் வெளியான முரசொலி ‘அந்துமணி-சிந்துமணி’ பகுதியில் ரஜினிகாந்தின் இமயமலை பயணம் கிண்டல் செய்யப்பட்டிருக்கிறது. ‘என்னடி சிந்து! ரஜினி இமயமலைக்கு புறப்பட்டுவிட்டாரே பார்த்தியா? அரசியல் என்ன ஆயிற்று?’ என அந்துமணி கேட்கிறார்.
அதற்கு சிந்துமணி, ‘அப்ப ஒரு பாட்டு பாடுவாங்க. நினைவிருக்கா உனக்கு! ‘நான்தான் உங்கப்பன்டா, நல்லமுத்து பேரன்டா, வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாட வாரேன்டா’ என சடுகுடு விளையாட்டில் பாடிவிட்டு, ‘நான் போறேன் வீட்டுக்கு, நாளைக்கு வந்தா பாத்துக்கோ!’என வரும். அந்தப் பாடல் வரிகள்தான் இவங்க அரசியல் சடுகுடுவைப் பார்த்தா நினைவுக்கு வருது!’ என பதில் சொல்வதாக வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே இதுவரை பெரிதாக திமுக.வை ‘அட்டாக்’ செய்யவில்லை. கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சியை தொடங்கி அடுத்தடுத்து இரு மாநாடுகள் நடத்திவிட்டார். ஆனால் அவரை இதுவரை திமுக கண்டு கொள்ளவில்லை.
ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. சென்னை வேலப்பன்சாவடியில் அண்மையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவிலும்கூட, ‘கலைஞரை மாதிரி ராஜ தந்திரி இந்தியாவில் கிடையாது. ஆட்சிக்கே வராவிட்டாலும் 13 ஆண்டுகள் கட்சியை கட்டுக்கோப்பா வச்சிருந்தார்’ என பாராட்டவும் செய்தார்.
ரஜினிகாந்த் தேர்தல் களத்தில் திமுக.வுக்கு போட்டியாக அமைவார் என கணித்தே முன்கூட்டியே திமுக அவர் மீதான ‘அட்டாக்’கை ஆரம்பித்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.