காவிரி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இந்த உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16) தீர்ப்பு வழங்கியது. இதன்படி ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 194 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம் அதில் இருந்து 14.75 டி.எம்.சி நீரை கூடுதலாக கர்நாடகாவுக்கு ஒதுக்கி விட்டது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களும், நடிகர் கமல் உள்ளிட்டோரும் இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் தருவதாக கூறினர்.
காவிரி தீர்ப்பு குறித்து அரசியல் பிரவேசத்திற்கு ஆயத்தமாகி வரும் ரஜினிகாந்த் இன்று மாலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என கூறியிருக்கிறார்.
ரஜினி இந்தப் பதிவை இட்ட 20 நிமிடங்களில் 3000 பேர் அதை ‘லைக்’ செய்திருக்கிறார்கள். 1200 பேர் ‘ரீ ட்வீட்’ செய்துள்ளனர். ரஜினி பூர்வீகமாக கர்நாடகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் பலரும் இதில் அவரது கருத்தை உற்று நோக்கியபடி இருந்தார்கள். ரஜினியும் தமிழகம் சார்ந்த பிரச்னைகளில் தனது ஆதரவு தமிழக மக்களுக்கே என உணர்த்தும் வகையில் இந்தப் பதிவை இட்டிருக்கிறார்.