ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தால், தமிழக அரசியல் மீண்டும் போயஸ் கார்டனில் ஆரம்பிக்கிறது என அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகி ஒருவரே கருத்து வெளியிட்டார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீக அரசியல் என ரஜினிகாந்த் குறிப்பிட்டிருப்பது, திராவிட அரசியலுக்கு மாற்றான அரசியலாக கருதப்படுகிறது. எனவே தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளுக்கும் எதிரான அரசியலை ரஜினிகாந்த் முன்னெடுக்க இருப்பதாக தெரிகிறது.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல்வேறு கட்சிகளிலும் இருக்கிறார்கள். தற்போது ரஜினியே தனிக்கட்சி தொடங்க இருப்பதால், பல்வேறு கட்சிகளிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் ரஜினியின் கட்சிக்கு திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெரிய கட்சிகளில் பொறுப்புகளில் இருப்பவர்களும்கூட ரஜினியை நோக்கி திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரஜினிகாந்தின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளரான ஹரி பிரபாகரன், ‘ரஜினியின் அரசியல் அறிவிப்பை ஒரு ரசிகன் என்ற முறையில் வரவேற்கிறேன். கடைசியாக ஒரு தைரியமான முடிவை ரஜினிகாந்த் எடுத்திருக்கிறார்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதிமுக ஐ.டி. பிரிவில் மிக பிஸியாக இயங்குபவர் ஹரி பிரபாகரன். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த இவர், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும்கூட!
ரஜினி அரசியலை வரவேற்கும் விதமாக ஹரி பிரபாகரன் வெளியிட்ட கருத்து, அதிமுக வட்டாரத்திலேயே அதிர்ச்சி அலைகளை கிளப்பியது. சிலர் அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘நீங்கள் அதிமுக.வில் இருப்பதை மறந்துவிடாதீர்கள்’ என குறிப்பிட்டனர். ஆனால் அது குறித்து கவலைப்படாமல் அடுத்தடுத்து ரஜினியை மெச்சும் விதமாக பதிவுகளை போட்டபடி இருந்தார் ஹரி பிரபாகரன்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பான அடுத்த பதிவில், ‘தமிழக அரசியல் அதிமுக.வுக்கும் ரஜினிக்கும் இடையிலான போட்டியாக உருவாகும். ஸ்டாலினின் முதல்வர் கனவு, கனவாகவே இருக்கும்’ என குறிப்பிட்டார் ஹரி பிரபாகரன். ‘ரஜினியின் அரசியல் வருகை திமுக.வை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. மீண்டும் போயஸ் கார்டனில் இருந்து தமிழக அரசியல் ஆரம்பிக்கிறது’ என்றும் ஹரி பிரபாகரன் கூறியுள்ளார்.
ஆனாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும் கருத்துகள் தனது சொந்தக் கருத்து என்றும், அவை கட்சியின் கருத்து அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஹரி பிரபாகரன். ரஜினி ரசிகர்களாக இதேபோல பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஆதரவுக் குரல் கிளம்பலாம் என தெரிகிறது.