ரஜினிகாந்தின் ‘ஆன்மீக அரசியல்’ அறிவிப்பு பாஜக.வுடன் கூட்டணி அமைக்கும் திட்டமா? அல்லது இடதுசாரிகளை தவிர்க்கவா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 31) தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது தனது அரசியலை, ‘ஆன்மீக அரசியல்’ என அடையாளப்படுத்தினார் ரஜினிகாந்த். ரஜினி ஆன்மீகம் மீது நாட்டம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் சொன்ன ஆன்மீக அரசியல் பலருக்கும் புதிரானது.
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு காரசார விவாதமாகியிருக்கிறது. ‘ரஜினி ஆன்மீக அரசியல் என குறிப்பிடுவது, பாஜக.வின் இந்துத்வ அரசியலைப் போல இருக்கிறது. இது ஆபத்தானது’ என குறிப்பிட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வகுப்புவாதத்தை ஆன்மீகம் என்று அழைப்பது பாஜகவின் உத்தி. ரஜினியின் ஆன்மீக அரசியல் வகுப்புவாத அரசியல்தான்’ என எழுதினார் ரவிகுமார்.
ரஜினிகாந்த் மீதான இந்த விமர்சனத்திற்கு பதில் தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், ‘ஆன்மீக அரசியல் என்றால், ஒழுக்க நெறிமுறைகளுக்கு உட்பட்ட அரசியல் என அர்த்தம். இதை ஏன் ரவிகுமார் போன்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. ரஜினியின் அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்.
தமிழ்நாட்டில் தேசிய அரசியல், திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், தலித் அரசியல், பெரியாரிய அரசியல் என பல பதங்கள் வழக்கமானவை. முதல்முறையாக, ‘ஆன்மீக அரசியல்’ என்கிற பதத்தையும் இணைத்து வைத்திருக்கிறார் ரஜினி.
ரஜினிகாந்தின் இந்த புதிய பதத்திற்கான விளக்கத்தை அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் பாஜக.வுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு என்பது ஆர்.கே.நகரில் தெரிந்துவிட்டது. எனவே பாஜக.வுடன் கூட்டணி அமைப்பதில் தலைவர் ஆர்வமாக இல்லை. தவிர, ரஜினிக்கு இஸ்லாமிய ரசிகர்கள் அதிகம். எனவே அவர்களின் ஆதரவை இழக்கவும் அவர் தயாரில்லை.
ரஜினிகாந்தின் டார்கெட், மாநில ஆட்சிதான்! எனவே டெல்லி அரசியலை அவர் அதிகம் பேசப்போவதில்லை. அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார். அவர், ‘வெளிப்படையான ஜாதி, மத பேதமற்ற ஆன்மீக அரசியல்’ என குறிப்பிடுவதில் இருந்தே பாஜக.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பு குறைவு என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இதைவிட, அவரது ஆன்மீக அரசியல் என்கிற வார்த்தையின் மிக முக்கியமான செய்தியே, இடதுசாரிகளையும் திராவிடக் கட்சிகளையும் தள்ளி வைக்கும் திட்டம்தான்! அதாவது, இங்கு செல்வாக்கு இல்லாத பாஜக.வை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஒரு கூட்டணிக்கு சிலர் முயற்சிக்கிறார்கள். அந்தக் கூட்டணிக்கும் ரஜினி தயாராக இல்லை.
அதனால்தான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என ரஜினி கூறியிருக்கிறார். ஒருவேளை தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் வேளையில் பாஜக சொற்ப தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவித்து, இணங்கி வந்தால் அப்போதைய சூழலுக்கு ஏற்ப கூட்டணி முடிவு எடுக்கலாம். அது பிரதமர் மோடி அணுகும் விதத்தைப் பொறுத்து இருக்கிறது’ என்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
அதாவது அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டிக்கே அதிக வாய்ப்பு! பாஜக.வின் அப்போதைய செல்வாக்கு, அந்தக் கட்சி கேட்கும் தொகுதிகளைப் பொறுத்து பாஜக.வுடன் கூட்டணிக்கான வாய்ப்பு குறைந்த அளவில் இருப்பதாக சொல்கிறார்கள். ரசிகர்கள் சந்திப்பு முடிந்ததும் ஆன்மீக அரசியல் என்பதற்கான விளக்கத்தை ரஜினியிடமே நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ரஜினி, ‘தர்மமான நியாயமான அரசியல் என்று அர்த்தம்’ என்றார், சிரித்துக்கொண்டே!