நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் செய்தி வெளியான நிலையில், தலைமையில் இருந்து அறிவிப்பு வரும்வரை அமைதி காக்குமாறு ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்லார்.
நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்று டிசம்பர் 3ம் தேதி அறிவித்தார். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவுமே இல்லை என்று ஹேஷ் டேக் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், ஜனவரியில் கட்சி தொடங்குவதால், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்தார்.
இதையடுத்து, ரஜினிகாந்த் பெங்களூருவில் டிசம்பர் 12ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். மறுநாள், அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஐதராபாத் புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் அங்கே அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' எனத் தகவல் வெளியாகியது. இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்த அறிவிப்பின் மூலம் நேற்று (டிசம்பர் 14) தெரியவந்தது.
தேர்தல் ஆணையத்தில் முதலில் அனைத்திந்தியா மக்கள் சக்தி கழகம் என்று பதிவு செய்யப்பட்ட இந்த கட்சி, இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்தல் ஆணைய அறிவிப்பின் மூலம் ‘மக்கள் சேவை கட்சி’ என்று மறுபெயரிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் களமிறங்க வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மக்கள் சேவை கட்சி விண்ணப்பித்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ரஜினிகாந்த்தின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், வேறு நபர்மூலம் விண்னப்பம் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் சின்னத்திற்கான முதல் விருப்பமாக பாபா திரைப்படத்தில் இடம்பெற்ற இரு விரல் சின்னம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு அடுத்து, பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ஆட்டோ ரிக்ஷா சின்னம் இரண்டாவது விருப்ப சின்னமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நடிகர் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தபோது ரஜினி மக்கள் மன்ற கொடியையும் அதன் சின்னமாக பாபா படத்தில் பிரபலமடைந்த பாபா முத்திரையையும் அறிமுகப்படுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துடன் இரு விரல் சின்னம் ஒத்திருப்பதால் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து ரஜினி தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வமன அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமானது. இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம், தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஜி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும் சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.