பாஜக.வுடன் கூட்டணியை தவிர்ப்பதில் உறுதியாக இருக்கிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது பாதை என்ன? என்பதையும் நெருக்கமானவர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார் அவர்.
ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால், ‘போர் வரும்போது பார்க்கலாம்’ என்றும் சொன்னார். சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி உறுதி என தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தொடக்கம் முதலே பிடி கொடாமல் பேசினார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்ன தருணத்தில், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிகுறிகள் இருந்தன. மத்திய பாஜக ஏதாவது குடைச்சல் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் தேர்தலை வர வைத்துவிடும் என்கிற பேச்சு உலவியது. ஒருவேளை அது நடந்திருந்தால், நாடாளுமன்றத் தேர்தலிலும் ரஜினி போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே வருகிறது. முழுக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது! இந்தத் தேர்தலில் பாஜக.வுடன் கூட்டணி அமைத்தால், அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் தூக்கிச் சுமக்க வேண்டிய பொறுப்பு ரஜினிகாந்த் மீது விழும்.
ஒருவேளை தமிழ்நாட்டில் பாஜக-ரஜினி அணி தோற்றால், அதனால் பாஜக.வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் ரஜினி அதோடு அரசியல் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு போய்விட வேண்டியதுதான்.
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு அரசியல் தூக்கலாக இருப்பதை ரஜினி புரிந்து கொண்டிருக்கிறார். எனவே பாஜக.வை நம்பி தனது அரசியல் அபிலாசையை பணயம் வைக்க அவர் தயாரில்லை. இதை பாஜக மேலிடத்திற்கும் உரியவர்கள் மூலமாக ரஜினி தெரியப்படுத்திவிட்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பலரும், ‘அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்’ என இவ்வளவு நாளாக விமர்சித்து வந்தனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷணன் ஒருபடி மேலே சென்று, ‘கழங்கள் இல்லாத தமிழ்நாடு’ என்பதை ஒரு கோஷமாக வைத்தார். பதிலுக்கு அதிமுக தலைவர்கள் பவ்யமாகவே கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்! தமிழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகள், பாஜக அபிமானிகள் சிலர், ‘பாஜக-அதிமுக கூட்டணி அமையவேண்டும்’ என பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆனால் அதிமுக இதை வெளிப்படையாக இதுவரை ஆதரிக்கவில்லை.
மாறாக, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, பாஜக.வை வெளுத்து வாங்குகிறார். ‘பாஜக.வை தூக்கிச் சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம்? அவர்கள் கட்சி காலூன்ற நாங்கள் ஏன் உழைக்க வேண்டும்?’ என்றெல்லாம் தம்பிதுரை கேள்விகளை எழுப்பி வருகிறார். அமைச்சர் ஜெயகுமாரும்கூட பாஜக அணிக்கு எதிரான கருத்தை பதிவு செய்திருக்கிறார். எனினும் தமிழக பாஜக தலைவர்கள் அதிமுக.வுக்கு எதிராக மூச்சு விடவில்லை.
ரஜினிகாந்த் கைவிட்ட பிறகுதான் பாஜக.விடம் இந்த மாற்றம் என்பதே அரசியல் உள் நிலவரங்களை அறிந்தவர்கள் சொல்லும் சங்கதி. அதிமுக.வில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சுலபமாக கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்கிற நம்பிக்கை பாஜக வட்டாரத்தில் காணப்படுகிறது. அதேபோல சீனியர் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சிலரும் பாஜக ஆதரவு மனநிலையில் இருப்பதாக பேச்சு உலவுகிறது.
ஆனால் தம்பிதுரை, அன்வர்ராஜா உள்பட அதிமுக எம்.பி.க்கள் சிலர் பாஜக அணியை விரும்பவில்லை. அதிமுக.வின் கீழ்மட்ட நிர்வாகிகளிலும் பெரும்பாலானோர், ‘ஜெயலலிதா வழியில் நாம் தனித்தோ, தனி அணி அமைத்தோ போட்டியிட வேண்டும்’ என்றே வலியுறுத்துகிறார்களாம். எனவே எடப்பாடி பழனிசாமியும், பாஜக அணியை தவிர்க்க முடியுமா? என்கிற எண்ணவோட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
இதற்கிடையே ரஜினிகாந்த் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக.வை தவிர்த்தே அணி அமைக்கும் திட்டத்தை வைத்திருப்பதாக கூறுகிறார்கள், விவரம் அறிந்தவர்கள். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக.வுடன் அணி அமைக்க பாஜக முயன்றபோது, ஜெயலலிதா பிடி கொடுக்கவில்லை. ‘பாஜக.வுடன் இணைந்து நிற்பதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்’ என்பதே ஜெயலலிதா கருத்தாக இருந்தது.
அதேபோல ரஜினிகாந்தும் தனது கருத்தை நேரடியாக பாஜக.வில் உள்ள தனது நண்பர்களிடம் தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. ரஜினிகாந்த் பாஜக.வை தவிர்த்தால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் சில ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்க முன்வரலாம் என்கிற கருத்தும் இருக்கிறது. இதை நோக்கிப் பயணப்பட ரஜினிகாந்த் தயாராகிவிட்டார் என்பதே இப்போதைய அரசியல் நிலவரம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.