நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீப்பின்படி கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்துக்கு எதிராக ‘காலா’ படம் வெளியாவதற்குக் கர்நாடக மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை குறித்த முடிவைக் கர்நாடக சினிமா வர்த்தக சபை எடுத்துள்ளது.
காலாவின் தடையை நீக்கக்கோரிப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், படத்தின் தடை குறித்த விவகாரத்தில் தலையிட முடியாது ஆனால் காலா திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிகாந்த் அவர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில், தான் உச்சநீதிமன்றம் கூறியதையே கருத்தாகத் தெரிவித்ததாகவும், காவிரிக்காகக் காலா படத்தைத் தடை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். பின்பு, உலகம் முழுவதும் வெளியாகும் இந்தப் படம், கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை என்றால் மக்கள் அதன் காரணத்தை தெரிந்துகொள்வார்கள் அது கர்நாடகாவிற்குத் தான் நன்றாக இருக்காது என்று கூறினார்.
குறிப்பாக, கர்நாடகாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்தப் படத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று கர்நாடக சினிமா வர்த்தகத்துறை தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் தடை குறித்த முடிவைக் கர்நாடக சினிமா வர்த்தகத்துறை எடுத்திருப்பது ஆச்சரியம் அளித்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.