Rajinikanth quits Politics Tamil News : தன் அரசியல் பயண கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் நேற்று வீடு திரும்பினார். உடல்நலம் மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தினால், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தைக் கைவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் ரஜினி. இவரின் இந்த அறிவிப்பு, தமிழக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. ரசிகர்களும், மக்களும் என்னை மன்னிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
"அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்" என்றும் "கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பை வெளியிடும்போது ஏற்பட்ட மனவலி எனக்கு மட்டும்தான் தெரியும்" என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ரஜினி.
மேலும், தமிழருவி மணியனுக்கும், அர்ஜூன மூர்த்திக்கும் தன் நன்றியை தெரிவித்திருக்கிறார். "3 ஆண்டுகளாக எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்கள், அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியின் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களால் என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"