Advertisment

தவறை ஒப்புக்கொண்ட ரஜினி: சொத்து வரியை செலுத்தினார்

நடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டப சொத்துவரி விவகாரத்தில், தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth, raghavendra mandapam Property tax issue, ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபம், ராகவேந்திரா திருமண மண்டபம் சொத்துவரி விகராம், ரஜினி டிவீட், தவறைத் தவிர்த்திருக்கலாம் ரஜினி கருத்து, rajini tweet mistake may have been avoided, greater chennai corporation

நடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டப சொத்துவரி விவகாரத்தில், தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

நடிகர் ரஜினிகாந்த், கொரோனா பொதுமுடக்க காலத்தில் திறக்கப்படாத தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு, விதிக்கப்பட்ட ரூ.6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு கடைசியாக பிப்ரவரி 14ம் தேதி கடைசியாக சொத்து வரி செலுத்தப்பட்டதாகவும், கொரோனா பொது முடக்க காலத்தில், மார்ச் 24-ம் தேதி முதல் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி மாநகராட்சி அளித்த சொத்து வரி ரசீதில், ஏப்ரல் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கு 6.50 லட்சம் சொத்து வரியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனால், தனது திருமண மண்டபம் மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு திறக்கப்படாததால், காலியிட நிவாரணத்திற்கு தனக்கு உரிமை உண்டு என்று ரஜினிகாந்த் தரப்பில் தெரிவித்தார்.

1919-ஆம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின் பிரிவு 105-ன் படி, 30 நாட்களுக்கு மேலாக வளாகம் காலியாக இருந்தால், வரி நிவாரணம் அளிக்க உதவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் இன்றுவரை எந்த பதிலும் இல்லை என்றும் ரஜினி மனுவில் கூறியிருந்தார்.

நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரை ஆண்டு காலத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த சொத்து வரிக்கு எதிரான ரஜினிகாந்த் தொடர்ந்த இந்த வழக்கு, அக்டோபர் 14ம் தேதி புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி அனிதா சுமந்த், “நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அதோடு அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக, ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமணம் மண்டபம் சொத்து வரி வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால், சமூக ஊடகங்களில் ரஜினியைப் பற்றி பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில், நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே பாடம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே, நடிகர் ரஜினிகாந்த் பெயரில் சென்னை மாநகராட்சியில் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரி அபராதத்துடன் செலுத்தப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Rajinikanth Greater Chennai Corporation Rajini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment