ரஜினிகாந்த் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். ‘காலா’ விழாவுக்கு பிறகு மன்றத்தினரை சந்திக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த், ஏப்ரல் 23-ம் தேதி இரவில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இரு வாரங்கள் அங்கு முகாமிட்டார். அங்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை ரஜினி மேற்கொண்டார். அமெரிக்கா செல்கிற வேளைகளில் மறக்காமல் தனது குரு சச்சிதானந்தாவின் ஆசிரமத்துக்கு ரஜினி செல்வது வழக்கம். இந்த முறையும் அங்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார்.
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினியை, ஆரத்தி எடுத்து வரவேற்கும் லதா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ள நிலையில் குருவின் ஆசி பெறும் வகையிலும் இந்தப் பயணத்தை அமைத்துக்கொண்டார். தவிர, அமெரிக்காவில் 2 நாட்களுக்கு முன் பொருளாதார நிபுணர்களை சந்தித்து, அரசியலில் தான் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் குறித்து ரஜினி ஆலோசித்தார்.
ரஜினிகாந்த் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (மே 4) இரவு 8.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். உடன் மகள் ஐஸ்வர்யாவும் இருந்தார். சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம், ‘உங்களது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை என்ன’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அவர் பதில் ஏதும் கூறாமல் வேகமாக சென்றார்.
ரஜினியை பின்தொடர்ந்து சென்ற பத்திரிகையாளர்கள், ‘நீட் தேர்வில் ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளதே?’ என்று கேட்டனர். அதற்கும் எந்த பதிலும் அளிக்காமல் வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல் வௌியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 9ம் தேதி மாலை நடக்கிறது. விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். இதில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. படத்தில் இடம்பெறும் பாடல்களை மேடையில் ஆடிப் பாடும் கலைநிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை யு டியூப், பேஸ்புக், டிவிட்டரில் நேரலையாக ஒளிபரப்ப உள்ளனர்.
மே 23-ம் தேதி மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. காலா பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு இது தொடர்பான அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. தனது அரசியல் நடவடிக்கைகளை ரஜினி வேகப்படுத்த இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறுகின்றனர்.