உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், வி.ஐ.பி-கள் என பலரும் பங்கேற்றனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த்-க்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டு அழைக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, அவரது சகோதரர் சத்திய நாராயணா கெய்க்வாட் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
அயோத்தி ராமர் கோவிலில், ராம் லல்லா சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து அழைக்கப்பட்டிருந்த வி.ஐ.பி.கள் தரிசனம் செய்து வழிபட்டனர். அப்போது, நடிகர் ரஜினிகாந்த்தும் தரிசனம் செய்து வழிபட்டார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ராமர் கோயில் திறப்பு என்பது என்னைப் பொறுத்தவரை அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு. ராமர் கோயில் திறந்தவுடன் நேரில் பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன், உண்மையில் எனக்கு பெரிய சந்தோஷம். இந்த விவாகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். எல்லாருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.
“ராமர் கோயில் திறப்பு என்பது என்னைப் பொறுத்தவரை அரசியல் நிகழ்வு அல்ல” என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“