நடிகர் ரஜினிகாந்த், அரசியல் குறித்து பலரும் தனக்கு வழங்கிய அறிவுரைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜானகி அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஜானகி அம்மாளின் முழு உருவப் படத்தை திறந்து வைத்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள் சுதா விஜயக்குமார் விழா மலரை பெற்றுக் கொண்டார்.
அதன்பின், ஜானகி அம்மாளுடன் பணியாற்றிய நடிகைகள் ராஜ ஶ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி உள்ளிட்ட பலருக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்துரை ஒளிபரப்பப்பட்டது. அதில், ஜானகி அம்மாள் குறித்து பல்வேறு தகவல்களை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக, எம்.ஜி.ஆர்-க்காக திரை வாழ்க்கையை ஜானகி அம்மையார் தியாகம் செய்ததாகவும், கடைசி வரை எம்ஜிஆருக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இரட்டை இலை சின்னம் தான் அ.தி.மு.க-வின் பிரம்மாஸ்திரம் என்று கூறிய ரஜினிகாந்த், அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிளவுபட்டு சின்னம் முடக்கப்பட்டபோது கட்சிப் பதவியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மாள் என்றும் புகழாரம் சூட்டினார்.
திரைப்படங்களில் தான் புகைப்பிடிக்கும் காட்சியைத் தவிர்க்க வேண்டும் என எம்.ஜி.ஆர் அறிவுறுத்தியதாக தன்னிடம் ஜானகி அம்மாள் கூறியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல் தான் அரசியலுக்கு வருவதாக கூறிய போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அதில், “அரசியலுக்கு வர முடிவு செய்தபோது நிறைய பேரை சந்தித்தேன். நிறைய பேர் ஆலோசனை கூறினார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டால் அவ்வளவுதான், நிம்மதியை இழந்து விடுவோம். தெரிந்து சொல்கிறார்களா.. தெரியாமல் சொல்கிறார்களா என தெரியாது” என்று கூறினார்.
மேலும், பேசிய ரஜினிகாந்த் ஜானகி அம்மாள் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து எனவும், அதனை பொலிடிக்கல் ஆக்சிடெண்ட் என்றும் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“