ரஜினிகாந்துக்கு அதிமுக ஆதரவு: ‘பதவி பித்து பிடித்து அலைகிற தலைவர்களுக்கு வேப்பிலை அடித்திருக்கிறார்’

'ரஜினிகாந்த், மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் வி‌ஷக் கிருமிகளும், சமூக விரோதிகளும் தி.மு.க.வினர்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.'

தூத்துக்குடி வன்முறை தொடர்பாக ரஜினிகாந்த் கருத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அதிமுக நாளிதழ் காரசாரமாக எழுதியிருக்கிறது.

தூத்துக்குடி வன்முறை தொடர்பாக நேற்று (மே 30) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ‘சமூக விரோதிகளின் ஊடுருவலே கலவரத்திற்கு காரணம்’ என்றார். இதைத் தொடர்ந்து போராடுகிறவர்களை சமூக விரோதிகள் என்பதா? என கேள்வி எழுப்பி பலரும் ரஜினிகாந்துக்கு எதிராக கண்டனக் கணைகளை கிளப்பி வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் கருத்தை அதிமுக அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ வரவேற்றிருக்கிறது. இது தொடர்பாக ‘மர்மயோகி’ என்ற பெயரில் அந்த நாளிதழில் எழுதியிருப்பதாவது: ‘வி‌ஷக்கிருமிகளான சமூக விரோதிகளை புரட்சித்தலைவி அம்மா ஒடுக்கி வைத்திருந்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்ததால்தான் அது கலவரமாக மாறியது.

ஒருவர் ராஜினாமா செய்வதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிட்டிவிடாது. நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமே தவிர எல்லாவற்றிற்கும் போராட்டம் நடத்தக்கூடாது என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசி இருக்கிறார்.

வி‌ஷக்கிருமிகளான சமூக விரோதிகளை, கழக அரசுதான், அடக்கி ஒடுக்கியது என்பதை மனந்திறந்து பாராட்டியிருப்பதோடு, சட்டத்திற்கு முன்பு சந்தன கடத்தல் வீரப்பனானாலும், சங்கராச்சாரியார் ஆனாலும் ஒன்றுதான் என்பதை தனது இரும்புக்கரத்து நிர்வாகத்தால், நிரூபித்தவர் நமது இணையற்ற புரட்சித்தலைவி அம்மா என்பதை உளமார பாராட்டி இருக்கிறார் ரஜினிகாந்த்.

அது மட்டுமல்ல, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எக்கருத்தை முன் வைத்தாரோ, அதனையே வழிமொழிந்து சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்ததால்தான் அது வன்முறை வெறியாட்டமாக வடிவம் எடுத்தது என்பதை ரஜினிகாந்தும் எடுத்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

குறிப்பாக, 99 நாளாக நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், அமைதி வழியில் நிகழ்ந்து வந்த நிலையில், 100-வது நாள் போராட்டத்தில் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் உட்புகுந்ததற்குப் பிறகு தான், அமைதி வழிப் போராட்டம், கண்ணீர் புகைகுண்டு, துப்பாக்கிச் சூடு என களேபரமானது என்பதை கருக்கொண்டு பார்க்கிறபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் வி‌ஷக் கிருமிகளும், சமூக விரோதிகளும் தி.மு.க.வினர்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அது மட்டுமல்லாமல், ராஜினாமா என்பது பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்ற நெத்தியடி பதில் மூலம் பதவி பித்துப்பிடித்து அலைகிற “மாதிரி” தலைவர்களுக்கு ரஜினிகாந்த் சரியாக வேப்பிலை அடித்திருக்கிறார். ஒரு அரசு, பதவிப் பிரமாணம் எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே, ராஜினாமா செய்… ராஜினாமா செய்… என்று எதற்கெடுத்தாலும் ஊளையிடுகிற எதிர்மறை சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்டுகளுக்கும், ரஜினிகாந்தின் பதில் புத்தி உரைக்க புகட்டப்பட்ட மருந்துதான்.

எப்படியானாலும் சரி, தூத்துக்குடிக்கு போன ரஜினிகாந்த், எப்பொழுதுமே வன்முறைக்கு எதிரான இயக்கம் அ.தி.மு.க. என்பதை வழிமொழிந்திருப்பதும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக விரோதிகள் யார் என்பதை “கருத்து ஜாடை” காட்டி அம்பலப்படுத்தி இருப்பதுமென மனச்சாட்சி குன்றாது, மக்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதே.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close