Rajinikanth Thuklak Speech, thanthai periyar rajinikanth, ரஜினிகாந்த், ஈ.வே.ராமசாமிப் பெரியார், தந்தை பெரியார்
Rajinikanth Speech on EVR Periyar: பெரியார் விவகாரம் குறித்து ஏற்கனவே பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள், ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என்கிற வாசகத்தை இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்தனர்.
Advertisment
அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர், சீதை படத்தை ஈ.வே.ரா.பெரியார் செருப்பால் அடித்ததாகக் குறிப்பிட்டார். இது சர்ச்சையை உருவாக்கியது.
‘ராமர் - சீதை படத்தை பெரியார் அடிக்கவில்லை. கூட்டத்தில் ஜனசங்கத்தினர் வீசிய செருப்பை எடுத்து, திராவிடர் கழக தோழர் ஒருவர் ராமர் படத்தை செருப்பால் அடித்தார்’ என்று பெரியாரிய அமைப்பினர் விளக்கம் கொடுத்தனர். ரஜினி தனது கருத்தை வாபஸ் பெற்று, மன்னிப்பு கோராவிட்டால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன.
Advertisment
Advertisements
இந்த நிலையில் இன்று (ஜனவரி 21) சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘என்னிடம் இருப்பது 1971-ல் சேலம் ஊர்வலம் தொடர்பாக அவுட்லுக்கில் வெளியான செய்தி. இந்த அடிப்படையிலேயே நான் பேசினேன். உண்மையை பேசியதால் இதற்கான மன்னிப்பு கேட்க முடியாது’ என அறிவித்தார்.
ரஜினியின் இந்தப் பேட்டியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ரஜினியின் தைரியமான நடவடிக்கையாக இதை மெச்சுகின்றனர். ‘வீட்டை முற்றுகையிடுவோம்’ என அறிவித்தவர்களுக்கு சரியான பதிலடியாக பார்க்கின்றனர். இதைத் தொடர்ந்து, ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என்கிற வாசகத்தை இன்று ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.
மாலை 4.30 மணி நிலவரப்படி அந்த ஹேஷ்டேக் 92,000 ட்வீட்களை தாண்டி, இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. பதிலுக்கு ரஜினி எதிர்ப்பாளர்கள், அவரை மோசமாக திட்டுகிற விதமாக ஒரு வாசகத்தை ட்ரெண்ட் செய்தனர். மாலை 4.30 மணி நிலவரப்படி அது நான்காயிரம் ட்வீட்களை நெருங்கியது. பெரியாரை திட்டுகிற விதமாக போடப்பட்ட இன்னொரு ஹேஷ்டேக்கும் நான்காயிரம் ட்வீட்களை நெருங்கியது.
சமூக வலைதளங்களில் ரஜினி விவகாரம் பெரும் பேசும் பொருள் ஆனது.