Advertisment

பின்வாங்கிய ரஜினி... பின்னணி என்ன?

நடிகர் ரஜினிகாந்த், தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியல் பிரவேசத்தில் இருந்து பின்வாங்குகிறாரா? ரஜினியின் இந்த முடிவுக்கு பின்னணி என்ன?

author-image
WebDesk
New Update
rajinikanth, rajinikanth tweets, rajinikanth statement, Rajinikanth statement about his political stand, rajini will announce his political stand, rajinikanth political entry, ரஜினிகாந்த் அறிக்கை, ரஜினி அரசியலுக்கு வருவாரா, ரஜினி உடல்நிலை, ரஜினி, ரஜினி மக்கள் மன்றம், rajini makkal mandram, rajini political stand what, what is rajini political stand, rajini health condition, ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்குகிறாரா?

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் தேர்தல் களம் காணுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, அவரது உடல்நிலை பற்றியும் அரசியல் பிரவேசம் பற்றியும் செய்திகள் வெளிவான நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று கூறியிருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வராமால் பின்வாங்குகிறாரா? ரஜினியின் இந்த முடிவுக்கு பின்னணி என்ன என்பதை காண்போம்.

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு 1990-களில் தொடங்கியது. ரஜினியின் படங்களில் இடம் பெற்ற வசனங்களால் அவர் அரசியலில் நுழைவார் என்ற எதிர்பார்ப்புக்கு உயிர்கொடுத்து வந்தது.

ஒரு கட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்று ரசிகர்கள் ஓய்ந்திருந்த நிலையில், தமிழக அரசியலில் இரு துருவங்களாக பெரிய தலைவர்களாக விளங்கிய திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக தலைவர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ஏற்பட்டது. திமுகவில் அந்த வெற்றிடம் ஸ்டாலினால் நிரப்பப்பட்டாலும், அதிமுகவில் இன்னும் தலைமை யார் என்று நிறுவப்படமால் அப்படியேதான் உள்ளது.

இரண்டு முக்கிய தலைவர்கள் மறைந்த பின்னர், பல சினிமா நடிகர்களும் தங்களும் தங்கள் அரசியல் ஈடுபட்டை சமிக்ஞை செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியும் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்களின் குரல் ஓங்கி ஒலித்தது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று கூறினார். இதனால், ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் அமைப்பை பலப்படுத்தும் வேளையில் இறங்கினர்.

ரஜினி தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் அதில் எல்லோரும் சமம் என்று கூறினார். திராவிட அரசியல், தேசியவாத அரசியல், இந்துத்துவ அரசியல் என்று பழக்கப்பட்டிருந்த மக்களுக்கு ஆன்மீக அரசியல் என்பது புதிதாகத்தான் இருந்தது.

ரஜினியின் அரசியல் வருகை உறுதியான பிறகு, ரஜினியின் எல்லா கருத்துகளும் தமிழக தமிழக அரசியலிலும் ஊடகங்களிலும் பெரிய விவாதங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையானது.

அதனைத் தொடர்ந்து, ரஜினி ஊடகங்களில் தெரிவித்த பல கருத்துகள் அரசுக்கு ஆதரவானதாகவே இருந்துவந்தது. அதனால், ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று பேசப்பட்டது. ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்கள் ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தனர்.

ரஜினி, தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் நடத்தினார். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் போன்றவர்கள் தங்களை ரஜினியின் அரசியல் ஆலோசகராக வெளிப்படுத்திக்கொண்டனர். ரஜினியின் மீதான நம்பிக்கையை வெளிப்படையாகக் கூறினார்கள்.

இதனிடையே, ரஜினி காலா, பேட்ட, தர்பார் என வெற்றி படங்களிலும் நடித்தார். அவருடைய உடல்நிலையிலும் சில பிரச்னைகள் ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அதிருப்தி தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. ஆட்சியும் கட்சியும் தனித் தனியாக இருக்க வேண்டும் என்று தனது புதிய அரசியல் ஃபார்முலாவைக் கூறினார்.

ரஜினியின் இந்த கருத்துகள் எல்லாம், ஊடகங்களில் வெளியாக மக்களின் கவனத்தையும் அரசியல்வாதிகளின் கவனத்தையும் பெற்றது. ரஜினி ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த சூழலில்தான், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் பரவத் தொடங்கியது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இயல்பு வாழ்கை முடங்கியது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று எல்லாமே மறுக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கை என்பது எப்போது திரும்ப வருமோ என்று எல்லோரும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

இன்னும்கூட தமிழக்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம்தான் அமலில் உள்ளது. மாநிலத்தில் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த தொற்று மீண்டும் அதிகரிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்குள், தமிழகத்துக்கு 2021ம் ஆண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்த சூழலில்தான் ரஜினியின் அறிக்கை என்று சமூக ஊடகங்களில் உலாவந்த ஒரு தகவல் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது என்ன தகவல் என்றால் ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அரசியலில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியது.

ரஜினியின் அறிக்கையாக வெளியான அந்த தகவலில் குறிப்பிட்டிருந்ததாவது, “"என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். இந்தக் கொரோனா பிரச்னையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், "கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக் கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களை விட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் இந்தக் கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துதான் கவலை. நான் துவங்குவதோ புதுக் கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல் நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதை இப்போதே சொல்லக் காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்தக் கொரோனா பிரச்னை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்தக் காரணங்களை காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, என் உடல் நலத்தில் அக்கறையுள்ள என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். மக்கள் தீர்ப்பே. மகேசன் தீர்ப்பு." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர், ரஜினி அரசியலுக்கு வருவதைவிட அவரது உடல்நலனும் ஆரோக்கியமும் முக்கியம் என்றும் அவருடைய முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால், ரஜினி தனது முடிவை மாற்றிக்கொண்டு அரசியலில் ஈடுபடவில்லை என்று செய்திகள் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” என்று திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசிய்ல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி தனது அறிக்கை என்று பொய்யாக உலாவரும் அறிக்கையை தனது அறிக்கை இல்லை என்று மறித்திருந்தாலும் அதில் அவருடைய உடல்நிலை பற்றிய தகவல்கள் உண்மை என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு அவர் கிட்டத்தட்ட அரசியலில் இருந்து பின்வாங்குவார் என்பதையே உணர்த்துகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரது உடல்நிலை மட்டுமல்லாமல் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ரஜினியின் குடும்பத்தினரும் ரசிகர்களும் அவர் அரசியல் கட்சி தொடங்குவதைவிட அவருடைய உயிர் முக்கியம் என்றே கூறுகின்றனர்.

ரஜினிக்கு தனது உயிரைப் பற்றி கவலை இல்லயென்று கூறினாலும், ஒருவேளை தனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால், அதன் பிறகு, தனது ரசிகர்களை யாராவது தவறாகப் பயன்படுத்திக்கொண்டால் என்ன செய்வது, அவர்கள் நடு ஆற்றில் விட்டுச் செல்லும் கதையாகி விடுமே என்ற அச்சம் எல்லாம்தான் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்குவதற்கான காரணம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Rajinikanth Rajini Rajini Makkal Mandram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment