நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை பற்றியும் அவருடைய அரசியல் பிரவேசம் பற்றியும் செய்திகள் வெளியான நிலையில், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று கூறினார்.
அதன்பிறகு, ரஜினிகாந்த் தெரிவித்த எல்லா கருத்துகளும் தமிழக அரசியலிலும் ஊடகங்களிலும் பெரிய விவாதங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த சூழலில்தான், கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கியது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. அரசியல் கட்சிகளின் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் அனுமதி இல்லை.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
நாடு கொரோனாவை எதிர்கொண்டு போராடி வரும் சூழலில்தான், 2021ம் ஆண்டில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தாயாராகி வருகின்றன. அதே நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி 2021 தேர்தலில் களம் காணுவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த நிலையில்தான், ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால், அவர் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. அவருடைய ரசிகர்களும் அரசியலைவிட ரஜினியின் உடல்நலனும் ஆரோக்கியமும் முக்கியம் என்று அவருடைய முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனால், ரஜினி தனது முடிவை மாற்றிக்கொண்டு அரசியலில் ஈடுபடவில்லை என்று செய்திகள் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” என்று திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசிய்ல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து என்ன அறிவிக்கப்போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook