Rajinikanth in Politics : ரஜினி அவர்களே.. நான் உட்பட எவனையும் நீங்கள் முதல்வர் என்று சொல்லாதீர்கள்.. கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆட்சித் தலைமையாக நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும்" என்று தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் கூட்டம் நடைபெற்றது... இதில் 'ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது, "ரஜினிகாந்த் பற்றற்ற ஒரு துறவியாகவே பாவிக்க கூடிய ஒரு மனிதர்.. யோசியுங்கள்.. ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்காக கொள்கைகளை குழிதோண்டி புதைத்த மனிதர்களைதானே பார்த்தோம்?
கொஞ்சமாவது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கோவம் வர வேணாமா? சைக்கிள் கடை வைத்திருப்பவர்கள்கூட வாடகைக்கு சைக்கிள் தர மறுத்திருக்கிறான்.. உன்னை நம்பி எப்படி நான் சைக்கிள் தருவது? நீ மெல்லமா நகர்ந்து அடுத்த ஊருக்கு போயிட்டால்? உன் விலாசம் என்ன? முகவரி தொலைத்த மனிதர்கள் இவர்கள்... இவர்கள்தான் இன்று தமிழகம் முழுவதும் அதானிகளாய், அம்பானிகளாய், டாட்டாக்களாய், பிர்லாக்களாய் வலம் வருகிறார்களே, இதை பார்த்து உங்களுக்கு கோபம் வர வேணாமா?
அரசியல் மாற்றம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் இல்லை.. ஒட்டுமொத்தமாக படிந்திருக்கும் இழிந்த அரசியல் கலாச்சாரத்தை தூக்கி போடுவதுதான் ரஜினியின் அரசியல் மாற்றம்.. அரசியலை தூய்மைப்படுத்தவே ரஜினி அரசியலுக்கு வருகிறார்.... ரஜினி என்னிடம் ஒருமுறை கேட்டார், "ஐயா, மாற்று அரசியல் என்று திரும்ப திரும்ப என்று நீங்கள்தான் பேசுகிறீர்கள்? நான் அந்த முதல்படியிலாவது நான் கால் வைக்க வேணாமா?" என்றார்.
உடனே நான், "அது என்ன முதல்படி?" என்றேன்... அதற்கு அவர், "ஆட்சி வேறு, கட்சி வேறு.. இப்படி இரண்டாக பிரிப்பேன்.. இதற்கு ஒரு கோடு போடுவேன்.. ஆட்சி ஒருத்தர் நடத்தட்டும், கட்சி ஒருத்தர் நடத்தட்டும்.. கட்சி நடத்துபவர்கள் அத்தனை பேரும் ஆட்சியிலும் போய் உட்கார்ந்துவிட்டால், அது கட்சியின் ஆட்சியாக இருக்குமே தவிர, மக்களின் ஆட்சியாக இருக்காது" என்று என்னிடம் சொன்னார். இதைவிட மக்களாட்சி தத்துவத்துக்கு வேறு யாரால் விளக்கம் தர முடியும்? உடனே நான் கேட்டேன்.. "சரி.. கட்சியை ஒருவரிடம் தந்துவிடுங்கள், ஆட்சியை நீங்கள் வைத்து கொள்ளுங்கள்" என்றேன்.
இப்படி திமுகவில் ஒருவரை காட்டுங்க பார்க்கலாம்... அதிமுகவினர் தற்போது ஒவ்வொரு துறையிலும் எப்படி வருவாய் ஈட்டலாம் என திமுகவுக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு உள்ளனர்... இதனால்தான் திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் ஒருவரை நாட்டிலிருந்து வெளியேற்ற முடியும் என்று நிரூபிக்கத் தயாரா? இதைத்தான் ரஜினி சொல்கிறார். அப்படி நிரூபித்தால் பொங்கி எழக்கூடிய முதல் மனிதர் ரஜினியாகத்தான் இருப்பார். 3 ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி தீர்க்கமாக சொன்னார். மாற்று அரசியலை கொண்டு வருவதற்காக ரஜினி அரசியலுக்கு வருகிறார்.
"ஏமாற்றம்"
ரஜினியின் "ஏமாற்றம்" என்னவென்றால் ரஜினி மன்றத்தினர் மக்களை சென்று சந்திக்கவில்லை என்பதுதான். அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் ரஜினியோடு இணைந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். 'சிஸ்டம் சரியில்லை' என்று ரஜினி சொன்னார். அந்த சிஸ்டத்தை கெடுத்தது 50 ஆண்டுகால திராவிட கட்சிகள்தானே? மகாத்மா காந்தி நினைத்து இருந்தால் அவர் இந்தியாவின் முதல் பிரதமராக வந்து அமர்ந்திருக்க முடியும்.. ஒருவரும் அவரை கேள்வி எழுப்பியிருக்க முடியாது.. பதவிகளே வேண்டாம் என்று துறவு நிலையில் இருந்தார்.. அவர்தான் ஜவஹர்லால் நேருவை பிரதமராக்கினார்... பின்னாளில் நேரு, காந்தியின் பேச்சை கேட்கவில்லை... அதிகாரம் வலிமையானது என்பதை உணருங்கள் என்று ரஜினியிடம் சொன்னேன்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி 3 விஷயங்களை பேசினார். அதில், ஆட்சிக்கு வந்தால் கட்சிப்பதவி பறிக்கப்படும். 48 வயதுக்குட்பட்டோருக்கு 60 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றார். இதற்கு ஒப்புக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் அடுத்து அவர் சொல்லிய விஷயத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. அது என்னவென்றால், நான் அதிகாரத்திற்கு வரமாட்டேன் என்றதுதான். ரஜினி, அமாவாசை என்றெண்ணி ஒருவரை பதவிக்கு அமர்த்தினால் அவர் பின்னாளில் நாகராஜ சோழனாக உருமாறுவார். அந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்.
முதல்வர் பழனிசாமியை சசிகலாதான் தேர்வு செய்தார். அதன்பின் நடப்பதை நீங்கள் அறிவீர்கள் என்று ரஜினியிடம் கூறினேன்... 30 நாள்கூட தேற மாட்டார் என்று நினைத்த எடப்பாடியையே 3 வருஷம் ஆகியும் அசைக்க முடியவில்லை.. எடப்பாடிக்கு பின்னால் அத்தனை பேரும் பன்னீரை பரிதவித்து விட்டு போய்விட்டார்களே.. அதிகாரம் எதையும் செய்யும்.. அமாவாசை என்றாலே எடப்பாடி என்றாகிவிட்டது.. அவரை நான் குறைத்து சொல்லவில்லை.. அவர் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது.. ஆனால், எடப்பாடியின் செயலும் அமாவாசையின் செயலும் அப்படியே பொருந்துகிறது.
கூவத்தூரில் எடப்பாடிதான் முதல்வர் என்று சொன்னதுமே அதுவரை வணங்கியபடி நின்றவர், அப்படியே முட்டி போட்டபடியே சசிகலாவிடம் வந்தார். இல்லையென்று சொல்ல சொல்லுங்கள் எடப்பாடியாரை.. இப்படி ஒரு அமாவாசை கிடைப்பார் என்று நாம்கூட நினைக்கவில்லை.. சசிகலா சிறைக்கு போனவுடன் முட்டி போட்டவர் எழுந்து நின்றார்.. பன்னீர் முதல்வராக இருந்தபோதுகூட ஜெயலலிதாவின் நாற்காலியில் உட்கார்ந்ததில்லை.. ஆனால், எடப்பாடியார் வருகிறார்.. கதவை திறக்க சொல்கிறார்.. எந்த நாற்காலியில் ஜெயலலிதா உட்கார்ந்தாரோ, அந்த நாற்காலியிலேயே உட்கார்ந்தார்.. மணிவண்ணனை போல் பன்னீர்செல்வம் இதை பார்த்து கொண்டிருந்தார்.
அதிகாரம்.. பதவி... இதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.. ரஜினி எந்த அமாவாசை பின்னால் செல்ல பார்க்கிறார்.. ஒருநாளும் இந்த தவறை ரஜினி செய்ய மாட்டார்.. ரஜினி அவர்களே.. நான் உட்பட எவனையும் நீங்கள் முதல்வர் என்று சொல்லாதீர்கள்.. கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆட்சித் தலைமையாக ரஜினி மட்டுமே இருக்க வேண்டும். இந்த கோரிக்கையை உங்களிடம் வைக்கிறேன் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.