உடல் நலன் தேறி வந்திருக்கும் ரஜினிகாந்துக்கு பிரசாரப் பணிகள் மட்டுமல்ல, தனது மன்றத்தை கூர்மை செய்யவேண்டிய முதல் பணியும் காத்திருக்கிறது. சாம்பிளுக்கு கள நிலவரத்தை கூறும் ஒரு ரிப்போர்ட் இது!
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்பு ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக உருமாறியது. அப்போது புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இருபது, முப்பது வருடங்களாக மன்றத்தை நிர்வாகம் செய்து வந்த ரசிகர்கள்; பணம் செலவு செய்ய முடியாது என்கிற காரணத்தை காட்டி முக்கிய பொறுப்பிற்கு வர முடியாமல் தடுக்கப்பட்டனர் என்கிற அதிருப்திகள் எல்லாம் வெடித்தன.
அதற்கு காரணம் ரசிகர்களின் மனநிலையையும் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளின் அறிமுகமும் இல்லாத புதிய தலைமையால் நடந்தது என்று ரசிகர்கள் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தினர். அதன் பிறகு தலைவருக்காக நாம் ஒருங்கிணைந்துள்ளோம் என்று சமாதானமான கதைகள் எல்லாம் நடந்தது. கீழ்மட்ட அளவிலாவது நகர ஒன்றியங்களிலாவது ரசிகர்கள் பொறுப்புக்கு வந்தார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகிகளில் குறிப்பாக மாவட்ட செயலாளர்களில் பலர் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பாகவே மன்றத்தில் இருந்து விலகியிருந்தவர்கள். ரஜினி அரசியலுக்கு வருகின்றேன் என்று அறிவித்தவுடன் தங்களது பணபலத்தை காட்டி மாவட்ட செயலாளர்கள் ஆகிவிட்டனர் என்பது மிகப் பெரும்பான்மையான கீழ்மட்ட நிர்வாகிகளின் குரலாகவே இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இதில் ஓரிரு மாவட்ட செயலாளர்களைத் தவிர; வேலூர் சோளிங்கர் ரவி, சிவகங்கை ராமேஸ்வரம், வடசென்னை சந்தானம் போன்றவர்களைத்தவிர, பலர் செலவும் செய்யாமல் ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களிடமே வசூல் செய்து தங்களது செலவுபோல் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டையில் மூவேந்தர்களில் ஒருவர் பெயரை தனது பெயரில் பின் பாதியாகக் கொண்ட நிர்வாகி ஒருவரும், கடலூர் வடக்கு மாவட்டத்தில் ஈரெழுத்து பெயர் கொண்ட முக்கிய நிர்வாகி ஒருவரும் ரஜினி மக்கள் மன்றமாக மாறியது முதல் பூத் கமிட்டி அமைக்கக்கூட கடந்த மூன்று வருடங்களில் எந்த ஒன்றியத்திற்கும் இதுவரை சென்றதே இல்லை என்கிறார்கள். கடலூர் நிர்வாகி இதுவரை எந்த ஒன்றியச் செயலாளரிடமும் பேசியதே இல்லை என்றும் கூறுகின்றனர், கீழ்மட்ட நிர்வாகிகள்.
20 வருடமாக ஓன்றிய செயலாளர்களாக இருக்கும் சீனியர் நிர்வாகிகளை தனக்குப் போட்டியாக வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் நிராகரிப்பதும், அவர்களின் பெயரை போஸ்டரில் போட வேண்டாம் என்று சொல்வதும், நிர்வாகிகளை ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று சொல்லி ஆங்காங்கே ஒரு கோஷ்டி அரசியலை உருவாக்குவதும் ஒரு மாவட்ட முக்கிய நிர்வாகி செய்கிற வேலையா? என பொறுமுகிறார்கள், கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மன்றக் காவலர்கள்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒன்றிய நிர்வாகிகள் மிகவும் சிரமப்பட்டு பூத் கமிட்டி அமைத்து கொடுத்தால், ‘நீங்கள் கொடுக்கவில்லை என்று தலைமையிடம் சொல்லிவிடுவேன்’ என மிரட்டுகிற வேலையும் நடக்கிறதாம். ஏதாவது நிகழ்ச்சி என்றாலும் கூட ஒன்றிய செயலாளர்களை நேரடியாக தொலைபேசியில் கூட அழைப்பதில்லையாம்.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது குற்றச்சாட்டுகள் வர, இவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை மாவட்ட செயலாளராக போட்டார்கள். ஆனால் மீண்டும் மாநில நிர்வாகியாக இருந்த ‘இளைய மன்னன்’ பெயரைக் கொண்ட ஒருவர் மூலமாக லாபி செய்து மீண்டும் மாவட்ட செயலாளராகிவிட்டாராம். அதிலிருந்து தலைமையே என்னை மாற்ற விரும்பவில்லை; மாற்ற முடியவில்லை; இங்கே நான்தான் தலைவர் என்று பகிரங்கமாக மிரட்டுவதாக கீழ்மட்ட நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.
இவரை சிபாரிசு செய்து மீண்டும் பதவிக்கு கொண்டு வந்த ‘இளைய மன்னன்’ தற்போது டம்மி ஆகிவிட்டார். ஆனால் இவரின் ஆட்டம் அடங்கவில்லை என்று மாவட்ட நிர்வாகி ஒருவரே வேதனையுடன் தெரிவித்தார். இதற்கிடையில் மாநில நிர்வாகியாக இருந்த ராஜு மகாலிங்கம் செயல்படாதது, தலைமை மன்றமும் ஆக்டிவாக இல்லாததால் மாவட்ட அளவில் நடக்கின்ற எந்த பிரச்னைகளும் தலைமைக்கு தெரியவே இல்லை. தலைமைக்கும் மாவட்டத்திற்கும் நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கும் தகவல் தொடர்புகூட போதுமானதாக இல்லை.
‘நாங்கள் எல்லாம் இருப்பது தலைவருக்காக மட்டுமே. பதவிக்காக இல்லை. என் தலைவனின் வெற்றிக்காக மட்டுமே நாங்கள் இருக்கின்றோம். ஆனால் இதுபோன்ற மாவட்ட செயலாளர்களை வைத்துக்கொண்டு எந்த அரசியலும் செய்ய முடியவில்லை. இதுவரை எந்த ஒன்றியத்திலும் எந்த நிர்வாகிகளின் பெயரும் கூட கடலூர் வடக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிக்கு தெரிகிறதா என்பதே சந்தேகம்தான். ஒருமுறை கூட எந்த ஒன்றியத்திற்கும் அவர் வந்ததே இல்லை’ என்று அடித்துச் சொல்கின்றனர் ரசிகர்கள்.
ஆக்டிவாக செயல்படும் பல ஒன்றிய செயலாளர்கள் இங்கே இருக்கின்றனர். அவர்களில் யாராவது ஒருவரை பொறுப்பாளராக போடலாம். அப்படி செய்தாலொழிய இது போன்ற மாவட்டங்களில் மன்றம் சிறப்பாக இயங்க வாய்ப்பில்லை. இப்படி இருந்தால் மக்கள் செல்வாக்கு இருந்தும் இரண்டாவது இடத்திற்கு வருவது கூட சந்தேகம்தான் என்று வேதனையுடன் குமுறுகின்றனர் ரசிகர்கள். சிஸ்டத்தை சரி செய்வாரா ரஜினிகாந்த்?
திராவிட ஜீவா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.