ரஜினிகாந்த் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார். ரஜினி தனிக்கட்சி தொடங்கவிருக்கும் சூழலில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடக்கிறது.
ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகவும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார். இதற்கான தனியாக, ரஜினி மன்றம்’ என்ற பெயரில் வெப்சைட் தொடங்கி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் ரஜினிகாந்த் ஆரம்பித்துவிட்டார்.
ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்துக்கு ஆயத்தமாகும் வகையில் சென்னையில் நேற்று மூத்த பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். தொடர்ந்து மூத்த அரசியல் தலைவர்கள் ஓரிருவரை சந்திக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியல் களம் புக முடிவெடுத்தது முதல், திமுக.வுடன் பட்டும் படாமல் இருந்து வருகிறார். முரசொலி விழாவில்கூட மேடையேறுவதை தவிர்த்தார். வருகிற காலங்களில் திமுக.வை எதிர்த்தே பிரதானமாக அரசியல் செய்ய வேண்டியிருக்கும் என்பது ரஜினியின் கணிப்பு.
ரஜினிகாந்த் தனது கட்சி தொடக்க நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் நினைவைக்கூட பகிர்ந்துகொண்டார். பைரவி படத்தில் அவரது நடிப்பை பாராட்டி ஜெயலலிதா பொக்கே கொடுத்து விட்டதாக பதிவு செய்தார். எம்.எஜி.ஆர். குறித்தும் ஒரு இடத்தில் பேசினார். நடிகர் சோ குறித்து பேசினார். ஆனால் தன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்த கருணாநிதி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தபிறகு வைரமுத்துவுடன் வந்து ஒரு முறை மட்டுமே ரஜினிகாந்த் சந்தித்தார். அதன்பிறகு பெரிதாக அவர் கருணாநிதி மீது ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. இந்தச் சூழலில் நெருங்கிய நட்பு வட்டத்தினர் சிலரது ஆலோசனைப்படி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க அப்பாய்ன்மென்ட் கேட்டார் ரஜினி. அவருக்கு இன்று (டிசம்பர் 3) அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்த் இன்று மாலை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்கிறார். அப்போது அவரது உடல்நிலையை விசாரிப்பதுடன் தனது அரசியல் நுழைவை தெரிவித்து வாழ்த்து பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.