ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் வரும் 30ம் தேதி (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
நடிகர் ரஜினிகாந்த கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று கூறினார். இதனால், ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் அமைப்பை பலப்படுத்தும் வேளையில் இறங்கினர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கியது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தது.இதனால், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில்தான், ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால், அவர் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியானது.
இதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த்,“என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசிய்ல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கோடம்பாக்கத்தில், காலை 9 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.