முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தனக்கு 6 மாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்க கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பத்தூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி சிறையில் உள்ளார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் நளினியின் கோரிக்கையை ஏற்க மறுத்து, உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், லண்டனில் உள்ள தனது மகள் அரித்ராவின் திருமண ஏற்பாடுகள் செய்ய 6 மாதம் பரோலில் வெளியே செல்ல அனுமதி வழங்க கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ' கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறேன். இந்த கால கட்டத்தில் தனது தந்தையின் மறைவுக்கு மட்டும் ஒருமுறை பரோலில் சென்றேன். அதன்பின்னர், இதுவரை, பரோலில் செல்லவில்லை. தற்போது, தனது மகள் அரித்ராவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளேன். அந்த ஏற்பாடுகளை செய்ய குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும். எனவே, தனக்கு பரோல் வழங்க கேட்டு, தமிழக அரசிடம் 12-11-16 மற்றும் 23-1-17 ஆகிய தேதிகளில் மனு கொடுத்துள்ளேன். ஆனால், அந்த மனு குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்களன்று விசாரணைக்கு வருமெனத் தெரிகிறது.