ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் என்று தமிழக ஆளுநர் எடுத்த முடிவு முதல்வர் பழனிசாமிக்கே தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
7 பேர் விடுதலையில் மாநில அரசே முடிவெடுக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக அமைச்சரவை 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், அதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் தண்டனை அனுபைவித்து வரும் பேரறிவாளன், தனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
இந்த வழக்கு ஜனவரி 21ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கிறஞர் தெரிவித்தார்.
ஆனாலும், 7 பேர் விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்தக் கோரி பேரறிவாளன் தரப்பில், ஜனவரி 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வரராவ் முன்பு முறையிடப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த சூழலில், தமிழக முதல்வர் பழனிசாமி ஜனவரி 28ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்களுடன் சென்று சந்தித்தார். அப்போது அவர், ஆளுநரிடம் 7 பேரை விடுதலை செய்வது குறித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் 7 பேரை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், “அரசு தலைமை வழக்கறிஞர் இந்திய அரசியலமைப்பு சட்டம் 161வது ஷரத்துப்படி தாக்கல் செய்த விண்ணப்பத்தில், ஒரு வாரத்துக்குள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் ஜனவரி 21ம் தேதி உத்தரவிட்டதன்படி தற்போது இந்த பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுகிறது.
தமிழக ஆளுநர், தமிழ்நாட்டின் அனைத்து உண்மைகளையும் பதிவுகளையும் தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், ஜனவரி 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இணங்க, இந்த கோரிக்கையில் உத்தரவிட இந்திய குடியரசுத் தலைவரே பொருத்தமான தகுதிவாய்ந்தவராக உள்ளார் என்று தெரிவிதுள்ளார். மத்திய அரசால் இந்த திட்டம் சட்டப்படி செயல்படுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில் ஜனவரி 25ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் உத்தரவிட குடியரசுத் தலைவரே பொருத்தமானவர் என்று கூறியுள்ள நிலையில், ஜனவரி 28ம் தேதி முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து 7 பேர் விடுதலை தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தினார். இதையடுத்து, நேற்று (ஜனவரி 4) சட்டப்பேரவயில் பேசிய முதல்வர் பழனிசாமி, 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். இதனால், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எடுத்த முடிவு முதல்வர் பழனிசாமிக்கே தெரியாதா என்று கேள்வி எழுந்துள்ளது.