Rajiv Gandhi Assassination Accused Nalini asks 6 months Parole : மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் வழங்கக் கோரியும் வழக்கில் நேரில் ஆஜராகி வாதிடவும் அனுமதி கோரி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கடந்த 2000 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், 10 ஆண்டு அதற்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.
ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஜூன் 11ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியுள்ளார். பரோல் கோரி வேலூர் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்தியநாரயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு வரும் ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
மேலும் அவசரமாக பரோல் தேவை என்றால் உயர்நீதிமன்ற விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற நளினிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் படிக்க : 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு கடிதம் அனுப்பவில்லை – ஆளுநர் பன்வாரிலால்