scorecardresearch

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ஆளுனர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும்: தமிழக தலைவர்கள் வற்புறுத்தல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ஆளுனர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும்: தமிழக தலைவர்கள் வற்புறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்,இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக ஆளுனர் பதவி விலக வேண்டும் என்று அரசியல் தலைவர் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், முருகன் சாந்தன் பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு மட்டும் தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதில் கடந்த 2000-ம் ஆண்டு நளினிக்கும், அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு முருகன் சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு தன்னை விடுதலை செய்யக்கோரி, பேரறிவாளன் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்து ஆளுனர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், கடந்த சில மாதஙகளுக்கு முன்பு அரசியல் சாசனம் 142-ன் கீழ் பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து எஞ்சிய 6 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில விசாரணயில் இருந்து வந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் விடுதலை செய்யவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பை மேற்கொள் காட்டி தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்,

பேரறிவாளனைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது நாம் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும், மனிதநேயத்துக்கும் கிடைத்த வெற்றி! அரசின் முடிவுகளை நியமனப் பதவியில் இருப்போர் கிடப்பில் போடக்கூடாது என்ற வகையில் மக்களாட்சிக் கோட்பாட்டின் வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,

எந்த தவறும் செய்யாமல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தவர்களுக்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்த தவறும் செய்யாமல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இவர்களின் 30 ஆண்டு வாழ்க்கை திரும்ப கிடைக்க போகிறதா? இழந்துபோன காலம் திரும்ப கிடைக்கப்போவதில்லை. இப்போதாவது அவர்களை விடுதலை செய்தது நிம்மதி. இந்த தீர்ப்பு ஆளுனரின் அராஜகபோக்கிற்கு கிடைத்த பதிலடி, விடுதலை தாமதத்திற்கு தமிழக ஆளுனர்தான் முக்கிய காரணம். மனிதாபிமானமும், மனசாட்சியும் இல்லாத ஆளுனர் தமிழகத்தில் இருப்பது துரதிஷ்வசமானது என்று கூறியுள்ளார்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. 6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுகையில்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்தது வரவேற்கத்தக்கது. பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல், முட்டுக்கட்டை போட்ட ஆளுனர், இப்போது பதவி விலகுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில்,

இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும் என்று பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி இருந்தேன். பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை கடந்த மே மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளனை தொடர்ந்து தற்போது நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் உச்சநீதிமன்றம் இன்று (11.11.2022) விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உட்பட 6 பேருக்கு கிடைத்த தீர்ப்பு தாமதமானாலும் அவர்களின் விடுதலை வரவேற்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

நியமன ஆளுநரின் அதிகார மீறலை கண்டிக்கும்படி அமைந்த பேரறிவாளன் தீர்ப்பு அடிப்படையில், 6 பேரை விடுவித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

தம்பி பேரறிவாளனை தொடர்ந்து சகோதரி நளினி , தம்பி ரவிச்சந்திரன், முருகன் உட்பட அனைவரும் விடுதலையானது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைக்கு உறுதுணையாக நின்ற தமிழக அரசுக்கும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், அனைத்துலக தமிழ் சமூகத்திற்கும் நன்றி என கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rajiv gandhi assassination case 6 tamilans release political leaders opinion

Best of Express