தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி தான் ஓய்வு பெறும் நாளில் ஒரு வித்தியாசமான கோரிக்கையை வைத்தார். அந்த என்ன கோரிக்கை என்றால், ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின் சாட்சியாக இருக்கும் தனது போலீஸ் தொப்பியை அணிய வேண்டும் என்பதுதான் அது. இந்த வித்தியாசமான கோரிக்கையை வைத்த ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி பிரதீப் வி பிலிப்தான்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இரவில் ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் தான் அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த தொப்பி மற்றும் பேட்ஜை அணிய வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். நீதிமன்றமும் அதற்கு அனுமதித்தது. தொப்பியும் அந்த பெயர் பேட்ஜும் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து ஆதாரமாக எடுக்கப்பட்டது. அது இன்னும் சிபிஐ பாதுகாப்பில் உள்ளது. இருப்பினும், அந்த இரத்தம் தோய்ந்த தொப்பியையும் பெயர் பேட்ஜையும் அணிய நீதிமன்றம் அனுமதி அளித்தாலும் பிரதீப் வி பிலிப்-ஆல் அதை அணிய முடியாமல் போனது ஏன் என்பதையும் அதன் பின்னணியயும் பார்ப்போம்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப் வி பிலிப் இந்திய காவல் பணியில் 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். தமிழ்நாடு காவல்துறையில் ஏ.எஸ்.பி.யாக இணைந்து படிப்படியாக உயர்ந்து டிஜிபி ஆனார்.
பிரதீப் வி பிலிப் தமிழ்நாடு காவல்துறையில், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு எனப் பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர். பிரதீப் வி பிலிப்தான் தமிழ்நாடு காவல்துறையில் ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ என்ற காவல் துறை நண்பர்கள் அமைப்பை உருவாக்கினார்.
‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ பணியில் சமூக அக்கறையுள்ள இளைஞர்களை ஈடுபடுத்தி காவல்துறைக்கு உதவியாக வேலை செய்ய வைத்தார். அதுமட்டுமில்லாமல், பிரதீப் வி பிலிப் தமிழ்நாடு அரசின் விருது, குடியரசுத் தலைவர் பதக்கம் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இப்படி பல பெருமைக்குரிய பிரதீப் வி பிலிப், இந்தியாவையே நிலைகுலையச் செய்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட அவருக்கு அது ஒரு மறுபிறப்பு என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பிரதீப் வி பிலிப் அக்டோபர் 1ம் தேதி ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது, அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்தபோது தான் அணிந்திருந்த தோப்பியையும் பெயர் பேட்ஜையும் அணிய வேண்டும் என்று விரும்பினார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சம்பவத்தின்போது தான் அணிந்திருந்த தொப்பியையும் பெயர் பேட்ஜையும் அணிய விரும்பியதற்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது அது காக்கிச் சட்டைக்குள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஒரு மனிதனின் இதயம் தெரிந்தது.
1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் நடந்தது. அப்போது பிரதீப் வி பிலிப் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாக இருந்தார். அவருடைய ஐபிஎஸ் அதிகாரி பணிக்காலத்தின் தொடக்கத்திலேயே நடந்த இந்த பயங்கரமான சம்பவத்தில் பிரதீப் வி பிலிப் படுகாயம் அடைந்தார். 21 நாள்கள் மருத்துவமனையில் ஐ.சி.யுவில் இருந்தார். அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்கிறார்கள். கிட்டத்தட்ட அது ஒரு மறுபிறப்பு என்கிறார்கள். இப்போதும்கூட பிரதீப் வி பிலிப்பின் உடலில் வெடிகுண்டு சிதறல் துகள்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் நடந்த அதே 91ம் ஆண்டு மே 11ம் தேதிதான் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அப்பாவாகி 10 நாட்களே ஆகியிருந்த நிலையில், பிரதீப் வி பிலிப்புக்கு ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் படுகாயம் அடைந்தது பெரும் சோதனையாக அமைந்தது.
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் அன்றைக்கு பிரதீப் வி பிலிப் அணிந்திருந்த தொப்பியும் அந்த பெயர் பேட்ஜும் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து ஆதாரமாக கைப்பற்றப்பட்டது. அது இன்னும் சிபிஐ பாதுகாப்பில் உள்ளது.
இப்படி, தனது வாழ்வில் மிகவும் மறக்கமுடியாத மிகவும் செண்டிமென்ட்டாக அமைந்துவிட்ட தொப்பியையும் பெயர் பேட்ஜையும் தான் பணியில் இருந்து ஓய்வுபெறும் நாளில் அணிய விரும்பினார். அதனால், நீதிமன்றம் மூலம் அதை பெற முயற்சி செய்தார். அந்த தொப்பியையும் பேட்ஜையும் நிரந்தரமாக வைத்துக் கொள்வதற்கு கோரினார். இது தொடர்பாக பிரதீப் வி பிலிப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எப்போது தேவைப்பட்டாலும் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இந்த ஆவணங்கள் தேவைப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் தொப்பியையும் பேட்ஜையும் ஒரு மாத காலத்துக்கு அவற்றை வைத்துக் கொள்ள அனுமதி அளித்ததோடு 1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தி பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த தொப்பியையும் பேட்ஜையும் கைகளில் வாங்கியபோது பிரதீப் வி பிலிப் அந்த மறக்கமுடியாத நாளை நினைத்து கண்கலங்கினாராம். அந்தத் தொப்பியையும் பேட்ஜையும் வரும் 28ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிஜிபி பிரதீப் வி பிலிப்-க்கு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அக்டோபர் 1ம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு, “பிரதீப் தனது பணிக்காலத்தில் கடுஞ்சொல் பேசாத அதிகாரியாக இருக்கிறார். காவல் துறையினருக்கு சிந்தனை பயிற்சி அளித்ததில் அவருடைய பங்கு மிகப் பெரியது” என்று கூறினார்.
பிரிவு உபசார விழாவில் பேசிய பிரதீப் வி பிலிப், ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது நடந்தவைகளை கூறினார்.
அப்போது பிரதீப் வி பிலிப் பேசியதாவது: “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது அவருக்கு என விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தின் அருகில் நின்றிருந்தேன். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. நான் தூக்கி வீசப்பட்டதை உணர்ந்தேன். அப்போது என் முகம் எல்லாம் ரத்தமாக இருந்தது. தாகமாக இருக்கிறது என்று சொன்னபோது ஒரு சாதாரண மனிதர் எனக்குத் தண்ணீர் தந்தார். எனது நம்பிக்கையின் மிக முக்கியமான வேராக அந்தச் சம்பவம் இருந்தது.” என்று தனது பணி காலத்தில் நடந்த சம்பவங்களை விவரித்தார்.
ஆனால், பிரிவு உபசார விழாவில் அந்தத் தொப்பியையும் பேட்ஜையும் பிரதீப் வி பிலிப்-ஆல் அணிய முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, அந்த தொப்பியும் பேட்ஜும் ஏ.எஸ்.பி. பதவிக்கானது. இப்போது பிரதீப் வி பிலிப் டிஜிபி அந்தஸ்தில் ஓய்வு பெறுகிறார். அதுமட்டுமில்லாமல், காவல் யூனிஃபார்மும் மாறிவிட்டது. அதனால்தான் அவரால் அந்த தொப்பியையும் பேட்ஜையும் அணியவில்லை என்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“