திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். ஸ்ரீஹரன் என்ற முருகன் (நளினியின் கணவர்), சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் உடல்நலக்குறைவு காரணமாக சாந்தன் உயிரிழந்தார். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை முடிந்து விடுதலையான முருகன், லண்டன் செல்ல விசா எடுக்க அடையாள அட்டை வழங்குமாறு மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ”முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள்,” என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில், ஒன்றிய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன் உள்பட 3 பேரும் காவல்துறை வாகனம் மூலம் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வருகை தந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கையில் அவர்கள் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை, இந்தியாவில் அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்காக தண்டனை கொடுக்கப்பட்டது என்பதும் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தத்தம் தாய் மண்ணில் கால் பதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“