rajiv gandhi case : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பிய தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீநிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள பேரறிவாளன், நளினி உஉள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க கோரி, கடந்த பிப்ரவரியில் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என ஆயுள் தண்டனை கைதிகள் உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும் ஆயுள் தண்டனை என்பது எஞ்சிய ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வத்தது. அப்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன் இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த்தை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.