Rajiv Gandhi convicts release: ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா? என்கிற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு இது தொடர்பாக கருத்து கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்கு ஏங்கி வருகிறார்கள். அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, நிச்சயம் ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், ஏழு பேரின் விடுதலைக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இதுகுறித்து விடுமுறை நாளான கடந்த ஞாயிறன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆளுநர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவையின் கருத்துக்கேற்ப, ஆளுநரின் முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.
இதனால், மீண்டும் அவர்களது விடுதலையில் சிக்கல் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.