தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில், ரஜினி விடுத்த கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் சமூக விரோதிகளால் நடைபெற்றது என்று கூறியது சர்ச்சையானது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர்நிதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்த விசாரணை ஆணையம் இதுவரை 18 கட்டமாக விசாரணை நடத்தியுள்ளது. நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கல் உள்பட 445 பேர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வன்முறை சமூக விரோதிகள் நடத்தியது என்று கூறியது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது.
இதற்கு ரஜினிகாந்த் விசாரணை ஆணையம் முன்பு விசாரணைக்கு நேரில் ஆஜராக விளக்கு அளிக்க கோரி ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகும்போது ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்பதால் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக ஆணையத் தலைவர் அருணா தலைமையில் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் 19வது கட்ட விசாரணையை நேற்று (பிப்ரவரி 24) தொடங்கிய நிலையில், விசாரணை ஆணையம் நடிகர் ரஜினியின் கோரிக்கை ஏற்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.