மதுரை ராக்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா; அமைச்சர்கள் சேகர் பாபு, மூர்த்தி பங்கேற்பு
====================================
மதுரை மாவட்டம், அழகர் மலைக்கோவில் - நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு, பி. மூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அழகர் மலைக்கோவில் - நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு, பி. மூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, இருவரும் சோலைமலை முருகன் கோயிலில் - வெள்ளிக் கதவுகள் அமைக்கும் திருப்பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
Advertisment
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மதுரை அருகே திருமாலிருஞ்சோலை மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோயில் குடமுழக்கு விழா நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர் என துணை ஆணையர் எம்.ராமசாமி தெரிவித்தார்.
அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் உப கோவிலான ராக்காயின் அம்மன் கோயில் சுமார் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. 2022-23 ஆம் ஆண்டில் 1,000 கோயில்கள் ரூ.500 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிவிப்பின் ஒரு பகுதியாக இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (டிசம்பர் 11, 2022) மதுரை மாவட்டத்தில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் மரக் கதவுகளில் 250 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகளை நிறுவும் பணியை தொடங்கி வைத்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் உள்ள வித்தக விநாயகர், முருகன் மற்றும் வேல் சன்னதிகளுக்கு மொத்தம் ரூ.2 கோடி செலவில் மரக் கதவுகளில் 250 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர் பி.கே. சேகர் பாபு உடன், அமைச்சர் பி. மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆர். கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"