தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமர், லட்சுமணன் மற்றும் சீதா பிராட்டி வெண்கல சிலைகளை அண்மையில் இங்கிலாந்தில் இருந்து மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த சிலைகளை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) தலைமையகத்தில் இருந்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த சிலைகள் செப்டம்பர் 15ம் தேதி லண்டன் பெருநகர காவல்துறையால் ஒரு டிஜிட்டல் நிகழ்ச்சி மூலம் இந்திய துணை தூதரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அந்த சிலைகள் இந்தியாவுக்கு இந்த வாரம் தான் வந்து சேர்ந்தது. ராமர், லட்சுமணன், சீதா பிராட்டி சிலைகள் இந்திய உலோக கலையின் தலை சிறந்த படைப்புகளாக கருதப்படுகிறது. இந்த சிலைகள் 74 செ.மீ மற்றும் 90 செ.மீ உயரம் உடையவை.
2014 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையில் 40 பழங்கால கலை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து அரசாங்கம் மீட்டுள்ளது என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் கூறினார். அதே நேரத்தில் 1976 மற்றும் 2014 அனடுகளுக்கு இடையில் 13 பழங்கால கலைப் பொருட்கள் மட்டுமே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. “மேலும் 75-80 திருடப்பட்ட பழங்கால கலைப் பொருட்கள் திரும்பப் பெறுவது நடந்துகொண்டுள்ளது. ஆனால், அதற்கு சட்ட நடைமுறை நீண்ட காலம் ஆகும். இந்த சிலைகள் பற்றி ஏறாளமான புகைப்பட ஆவணங்கள் இருந்ததால் இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது மிகவும் எளிதாக நிரூபிக்கப்பட்டது.” என்று கூறினார். மேலும் அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை ஏற்படாதவாறு அந்தந்த மாநில அரசாங்கங்கள் அறக்கட்டளைகள், தொல்பொருட்களை பாதுகாப்பாக காவலில் வைக்க பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
1958 ஆம் ஆண்டு புகைப்பட ஆதாரங்களின்படி, இந்த சிலைகள் தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ ராஜகோபால் விஷ்ணு கோயிலுக்கு சொந்தமானது. போலீஸ் விசாரணையின்படி, இவை நவம்பர் 1978 இல் திருடப்பட்டது. அதற்கு பிறகு அவை திருடர்களிடம் இருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது சிலைகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த சிலைகள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு காட்சிக்கு வைக்கப்படும் என்று தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினவிழாவை நினைவுகூர்ததலின் ஒரு பகுதியாக சுதந்திர போராட்டத்தின் கருப்பொருள்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை, இந்திய மரபுகள் மற்றும் கலாச்சாரம், நாட்டுப்புற கலைகள் மற்றும் பாரம்பரியம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்கள் ஆகியவற்றில் பணியாற்றியவர்கள், டிசம்பர் 25, 2020 மற்றும் ஆகஸ்ட் 15, 2021க்கு இடையில் பெரும்பாலான ஏ.எஸ்.ஐ-பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை படம்பிடிப்பதற்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் அறிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”