விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று(மார்ச் 20) காலை தமிழகம் வந்தது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் “ராமராஜ்ஜிய ரத யாத்திரை”யானது ராம ராஜ்ஜியத்தை மறுநிர்மாணம் செய்தல், ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட முழக்கங்களை முன் வைத்து கடந்த மாதம் 13-ந் தேதி அயோத்தியில், உத்தரப்பிரதேச முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது இந்தியாவின் பல மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியே ரதயாத்திரையாக வருகிறது. பின்னர் எதிர்வரும் 25 ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவடைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ரத யாத்திரைக்கு புளியரை பகுதியில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் நுழைய இருக்கும் இந்த ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக, நாம் தமிழர் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புளியரை சோதனைச் சாவடியில் மறியல் போராட்டத்திலும் சிலர் ஈடுப்பட்டு வருகின்றன.
கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரைதான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரதயாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 20, 2018
இதனையடுத்து, நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 19 தொடங்கி 23 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தமிழகம் வரும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை எதிர்ப்பது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். இந்துக்கள் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீ ராம்.
— H Raja (@HRajaBJP) March 19, 2018
ராமர் கோவில் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இதுபோன்ற யாத்திரைகளை தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்துவதோடு, மீறி நுழைந்தால் தமிழக எல்லையிலேயே கைது செய்து உத்திரபிரதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) March 19, 2018
இந்த உத்தரவையடுத்து, மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் சங் பரிவார அமைப்பினருக்கு ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 20, 2018
சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2018
தமிழகத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரை LIVEUPDATES இதோ:
மாலை 3.00: இமயமலை சென்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மத கலவரம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதியம் 2.00 : ராமராஜ்ய ரதத்தை பின் தொடர 5 இருசக்கர வாகங்களுக்கு மட்டுமே அனுமதி நெல்லை எஸ்.பி அறிவிப்பு
மதியம் 1.30: ராம ராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்து எஸ்டிபி கட்சி மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா தலைமையில் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
மதியம் 1.00: ராம ராஜ்ய யாத்திரையை எதிர்த்து செங்கோட்டையில் போராட்டம் நடத்த சென்ற, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கைது.
மதியம் 12.00: நெல்லையில் நடைப்பெற்று வரும் ராம ராஜ்ய ரத யாத்திரையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி, எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர்.
காலை 11.30: ராம ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டாம் என்று வேண்டுக்கோள்
காலை 10.50: ராம ராஜ்ய யாத்திரை, மக்களை எந்தவிதத்திலும் மாற்றி விடாது. அவர்கள் தெளிவாகவே இருக்கின்றன என்று மீன் வளத்துறை அமைச்சர், ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
காலை 10.30: பக்தியை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றுவதே பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளார்ந்த திட்டம் என்று கி.வீரமணி கருத்து.
காலை 10.00: கோட்டை வாசல் வாஞ்சிநாதன் சிலை அருகே ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவரி ஜவாஹிருல்லா கைது.
காலை 9.50: ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டுவதற்காகவே நடத்தப்படுகிறது என்று சீமான் கருத்து.
காலை 9.45: சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது.
காலை 9.40: எல்லையான கோட்டைவாசல் வழியாக ரத யாத்திரை தமிழகம் வந்தது.