தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ரவ் புதிய அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அது சாதிக் கட்சியாக இருக்காது என்று அறிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பி.ராம மோகனராவ் நியமிக்கப்பட்டபோது கவனத்தைப் பெற்றார். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட பி ராம மோகன ராவ் 1957ல் பிறந்தவர். வணிகம், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1985ம் ஆண்டு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பயிற்சி அதிகாரி, உதவி மாவட்ட ஆட்சியர், கூடுதல் கலெக்டராக பணியைத் தொடங்கிய ராம மோகன ராவ், 1991,92 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், 1994, 96 ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார்.
குடிநீர் வழங்கல் செயல் இயக்குனர், பிறபடுத்தப்பட்டோர் நல ஆணைய இயக்குநர், நெடுஞ்சாலைத் துறை செயலர், வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை தலைவர், நிர்வாக இயக்குநர், சமூக நலன் சத்துணவு திட்டத் துறை செயலர், வேளாண்மைத் துறை செயலர் தமிழக அரசில் முக்கிய பதவிகளை வகித்த இவர், 2011ம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சரானபோது முதலமைச்சர் அலுவலகத்தின் 2வது செயல் அலுவலராக இருந்தார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரானபோது, தனக்கு முன்னிருந்த 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் தாண்டி, 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரானார்.
ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 21, 2016ம் ஆண்டு பி. ராம மோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்தபோது, சென்னை கோட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், எழுந்த சர்ச்சை காரணமாக ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதோடு வருக்கு வேறு பணி அளிக்கப்படாமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். பின்னர், மார்ச் 31, 2018ல் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக இருந்த நிலையில் 60 வயது நிறைவடைந்ததால் செப்டம்பர் 28, 2017ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என்ற முக்கிய பதவி வகித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம மோகன ராவ், ஓய்வு பெற்ற பிறகு, தெலுங்கு மொழி பேசும் சமுதாயத்தினரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். அவ்வப்போது, அரசியல் ரீதியான கருத்துகளையும் கூறிவந்தார். இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம மோகன ராவ், விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக பேசப்பட்டது.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமைதியாக இருந்து வந்த ராம்மோகன் ராவ், தற்போது மீண்டும் அரசியல் கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
திருமலை நாயக்கர் மன்னர் பிறந்தநாள் விழாவில், மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவருடைய சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பல்வேறு கட்சியினரும் கலந்துகொண்ட திருமலை நாயக்கர் மன்னர் பிறந்தநாள் அரசு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராம மோகன ராவ், “தெலுங்கு இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தமிழகத்தில் இருந்தும் மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செலுத்த யாரும் வரவில்லை. இதுவரை சமுதாயம், பண்பாடு, கலாசாரத்தை ஒருங்கிணைத்து செயல்பட்டுவந்தேன், விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளேன். அப்படி ஆரம்பிக்கும் கட்சி சாதி ரீதியாக அல்லாமல் பொதுவானதாகத் தொடங்கப்படும்.” என்று கூறினார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ரவ் புதிய அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அது சாதிக் கட்சியாக இருக்காது என்று அறிவித்திருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“