‘ஓ.பன்னீர் செல்வம் வேட்டி கட்டிய ஜெயலலிதா’!- ராமதாஸ்

பன்னீர்செல்வம் குடும்பத்தினரைக் காப்பாற்றும் முயற்சி என்பதே உண்மை

By: Published: July 26, 2018, 1:37:49 PM

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஊழல் வழக்குகளை உடைப்பதில் வேட்டி கட்டிய ஜெயலலிதா என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்தும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த தொடக்கக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது பன்னீர்செல்வத்தின் சொத்துக்குவிப்புகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல; சி.பி.ஐ. விசாரணையிலிருந்து பன்னீர்செல்வம் குடும்பத்தினரைக் காப்பாற்றும் முயற்சி என்பதே உண்மை.

20 ஆண்டுகளுக்கு முன் பால்பண்ணை ஒன்றிலும், தேநீர்க்கடை ஒன்றிலும் பங்குதாரராக இருந்த பன்னீர்செல்வத்தின் இன்றைய சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமது பினாமிகள் மூலமாக அவர் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலத்தில் உள்ள தனியார் சொத்துகளில் கிட்டத்தட்ட பாதியை பன்னீர்செல்வம் தரப்பு பினாமி பெயர்களில் வளைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளிலும் அவர் தரப்பு பண முதலீடுகளை செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. இவற்றை மிகவும் எளிதாக கண்டுபிடித்து பன்னீர்செல்வத்துக்கு தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால், கையூட்டுத் தடுப்புப்பிரிவு அதை செய்யாது. காரணம் பன்னீர்செல்வத்திடம் உள்ள அரசியல் அதிகாரம்.

ஊழல் வழக்குகளை உடைப்பதில் ஓ.பன்னீர் செல்வம் வேட்டி கட்டிய ஜெயலலிதா என்று கூறினால் அது மிகையாகாது. 2001-06 காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த பன்னீர் செல்வம் வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.1.72 கோடி சொத்துக் குவித்ததாக 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கமாக சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டால், அதிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி தான் குற்றஞ்சாற்றப்பட்டவர்கள் மனு செய்வார்கள். ஆனால், பன்னீர்செல்வமோ, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 173(8) ஆவது பிரிவின்படி, தம் மீதான வழக்கை மறு விசாரணை செய்யும்படி தேனி நீதிமன்றத்தில் மனு செய்தார். உண்மையில் குற்றஞ்சாற்றப்பட்டவர் அப்பாவியாகவே இருந்தாலும், இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய முடியாது. ஆனால், அதை பன்னீர் செய்தார்.

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு தேனி நீதிமன்றத்திலிருந்து சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின்னரும், சிறப்பு நீதிமன்றத்திற்கு செல்லாமல், இவ்வழக்குக்கு சம்பந்தமே இல்லாத தேனி நீதிமன்றத்தில் மனு செய்தார்.

தேனி நீதிமன்றமும் சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய ஆணையிட்டது. ஆனால், இதை சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு செய்த பன்னீர்செல்வம், இந்த வழக்கின் விசாரணையை சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொண்டார்.

இவை எதுவுமே சட்டத்தின்படி சாத்தியமில்லை என்றாலும் இவற்றையெல்லாம் பன்னீர் செல்வம் சாதித்தார். இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், பன்னீர் செல்வத்தின் இந்த கோரிக்கைகள் எதையும் கையூட்டு தடுப்புப்பிரிவு எதிர்க்கவில்லை என்பது தான். இத்தனைக்கும் அப்போது தான் தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதன்பின் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாற்றுகளை மறு விசாரணை செய்த கையூட்டுத் தடுப்புப் பிரிவு, அக்குற்றச் சாற்றுகள் எதற்கும் ஆதாரம் இல்லை என்று மனுத்தாக்கல் செய்தது. அதை ஏற்றுக் கொண்ட சிவகங்கை முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 03.12.2012 அன்று பன்னீர்செல்வம் தரப்பை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை, தி.மு.க. ஆட்சியிலேயே சட்டப்படி சாத்தியமற்ற வழிகளிலெல்லாம் வளைத்து நீதியைக் கொன்ற பன்னீர்செல்வம், இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த கையூட்டு தடுப்புப் பிரிவு விசாரணையில் தண்டிக்கப்படுவார் என்று எவரேனும் நினைத்தால் அதை விட பெரிய அறியாமை எதுவும் இருக்க முடியாது.

பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து வருவதாகக் கூறும் கையூட்டுத் தடுப்புப் பிரிவு இன்னும் சில வாரங்களில் அவர் சொக்கத்தங்கம் என்று கூறி வழக்கை ஊற்றி மூடிவிடும் என்பது தான் உண்மை.

எனவே, ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக் குவிப்புக் குற்றச்சாற்றுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் விசா ரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ramadoss abou o panneer selvam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X