காவிரி வரைவுத் திட்டம் தாக்கலாகவில்லை எனில் மத்திய நீர்வளத்துறை செயலாளரை கைது செய்க – ராமதாஸ்

மத்திய நீர்வளத்துறை செயலாளரை கைது செய்க

நாளை காவிரி வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப் படவில்லை என்றால், அதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி, அதற்கு காரணமான மத்திய நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுச் செயல்திட்டத்தை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று வரை நடைபெறாதது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவது இதன்மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

காவிரி வரைவுச் செயல்திட்டத்தை மார்ச் 29-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், மத்திய அரசு வாய்தா மேல் வாய்தா வாங்கியதால் நாளை மே 14-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 3-ஆம் தேதிக்குள் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யும்படி ஆணையிட்டிருந்தது.

ஆனால், அன்றைக்குள் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாததற்கும், அதன்பின் இருமுறை காலநீட்டிப்பு கோரியதற்கும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணம்,‘‘ காவிரி வரைவுத் திட்டம் தயாராகி விட்டது. ஆனால், கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமரும், மத்திய அமைச்சர்களும் சென்று விட்டதால், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதற்கு ஒப்புதல் பெற முடியவில்லை’’ என்பது தான். இப்போது கர்நாடகப் பரப்புரை முடிந்து 3 நாட்களாகியும் அமைச்சரவை கூடவில்லை.

கர்நாடகத் தேர்தல் பரப்புரை முடிவடைந்த பின்னர் பிரதமர் நரேந்திரமோடி திடீர் பயணமாக நேபாளம் சென்றதன் நோக்கமும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தையும், அதில் காவிரி வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதையும் தவிர்ப்பதற்காகத் தானோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. நேபாள பயணம் முடிந்து பிரதமர் தாயகம் திரும்பி விட்ட நிலையில், இன்றும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை.

காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை என்பது தான் உண்மை. இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பலமுறை சுட்டிக்காட்டிய போதிலும், அதை ஏற்காத மத்திய அரசு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய முடியும் என்று கூறிவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் கெடு இன்று முடிவடையும் நிலையில் இதுவரை அமைச்சரவையைக் கூட்டி காவிரி வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

அதுமட்டுமின்றி, ஒருவேளை காவிரி வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நாளை தாக்கல் செய்தாலும் கூட, அதன்படி அமைக்கப்படவிருக்கும் அமைப்பு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அதிகாரம் கொண்டதாக இருக்காது. இதை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் அவரையும் அறியாமல் உச்சநீதிமன்றத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்ட போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ‘‘காவிரி மேலாண்மை வாரியத்தால் தண்ணீர் விட முடியாது. கண்காணிக்கத் தான் முடியும்’’ என்று கூறியிருக்கிறார்.

இதன்மூலம் காவிரி வரைவுத் திட்டத்தை உடனடியாக தாக்கல் செய்யாமல் முடிந்தவரை இழுத்தடிப்பது, நீண்ட இழுபறிக்கு பிறகு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தாலும், அதன்படி அமைக்கப்பட உள்ள புதிய அமைப்புக்கு கர்நாடக அணைகளை கையகப்படுத்தும் அதிகாரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது என்பது தான் மத்திய அரசின் திட்டம் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிட்டது.

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் தமிழகத்திற்கு சிறிதளவு கூட நியாயம் கிடைத்து விடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. காவிரி நடுவர் மன்றம் அமைக்க ஆணையிட்ட வி.பி.சிங் அரசு தவிர மத்தியில் இதுவரை அமைந்த அனைத்து அரசுகளும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்துள்ளன.

மத்தியில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளையும் விட இப்போது ஆட்சி செய்யும் நரேந்திர மோடி அரசு தான் தமிழகத்திற்கு மிக அதிக துரோகத்தை செய்திருக்கிறது. தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் துரோகம் இனியும் தொடர உச்சநீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்துடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரகாஷ் சிங் நாளை காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதன்படி நாளை காவிரி வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப் படவில்லை என்றால், அதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி, அதற்கு காரணமான மத்திய நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ramadoss about cauvery draft project

Next Story
அன்னையர் தினம் : வாழ்த்து கூறிய ஸ்டாலின்! மகனை முத்தமிட்டு கொஞ்சிய தயாளு அம்மாள்!!!stalin meet dhayalu ammal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com