பசுமைச் சாலை: ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது மோசடி, ஏமாற்று வேலை! - ராமதாஸ்

அப்படிப்பட்ட அரசு இப்போது 500 மடங்கு அதிக விலை தருகிறோம் என சொல்வதை எப்படி நம்புவது?

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து சேலத்திற்கு ரூ.10,000 கோடியில் அமைக்கப்படவிருக்கும் பசுமைவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் பினாமி அரசு, உழவர்களுக்கு பணத்தாசைக் காட்டி நிலங்களை பறித்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. நிலங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு தருவதாக அரசு கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.

சென்னை& சேலம் 8 வழிச் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி சேலம் மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமுறை தலைமுறையாக தங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை தாரை வார்க்க மறுக்கும் விவசாயிகள், தங்கள் நிலங்களை அளவீடு செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களை காவல்துறை மூலம் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் அரசு, அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக நிலங்களை அளவீடு செய்து வருகிறது. ஆனாலும் போராட்டங்கள் நீடிக்கின்றன. இதுவரை சுமார் 25 கி.மீ தொலைவுக்கு மட்டுமே நில அளவை பணிகள் முடிந்துள்ள நிலையில், நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சுமார் 100 உழவர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். அவர்கள் காப்பாற்றப்பட்டு விட்ட போதிலும், அவர்களின் எதிர்ப்பால் அச்சமடைந்துள்ள அரசு அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அவர் நினைப்பதை நிறைவேற்றிக் கொடுப்பதற்காகவே மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பசுமைச் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால், இது அப்பட்டமான பொய் ஆகும். பசுமைச் சாலைத் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களே இதை நிரூபிக்க போதுமானவை ஆகும்.

மொத்தம் 277 கி.மீ. நீள பசுமைவழிச் சாலைக்காக 5 மாவட்டங்களில் 2554 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இது தவிர காஞ்சிபுரம், சேத்பட், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இணைப்புச் சாலைகள் அமைப்பதற்காக 237 ஹெக்டேர் நிலங்கள் எடுக்கப்படவுள்ளன. மாவட்ட வாரியாக பார்த்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1327 ஹெக்டேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 483 ஹெக்டேர், சேலம் மாவட்டத்தில் 406 ஹெக்டேர், தருமபுரி மாவட்டத்தில் 298 ஹெக்டேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 ஹெக்டேர், சாலையின் முக்கிய இடங்களில் கூடுதல் இடம் ஒதுக்குவதற்காக 232 ஹெக்டேர் என 2791 ஹெக்டேர் நிலங்கள் எடுக்கப்பட வேண்டும். சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது இந்த நிலங்களை கையகப்படுத்த மிகக்குறைந்த தொகையே உழவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரி விலையாக ஹெக்டேருக்கு ரூ.75 லட்சம், சேலம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.25 லட்சம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.09 லட்சம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.07 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட இரண்டரை மடங்கு முதல் அதிகபட்சமாக நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.1.87 கோடி முதல் ரூ.3 கோடி வரையும், சேலம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.62.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.22.50 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரையும் மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும். இந்த விலை கூட நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கான இழப்பீட்டையும் சேர்த்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் உண்மை நிலை எனும் போது எங்கு, எந்த நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்பதை பினாமி ஆட்சியாளர்களோ, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரோ விளக்கத் தயாரா?

கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்காக வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவாகும். உதாரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வண்டலூர், படப்பையில் தொடங்கி இந்த சாலை அமையவுள்ள பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் ஒன்றரை கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் ஒரு ஹெக்டேர் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.3.75 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆகும். 2013&ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலத்தின் மதிப்பை விட இரண்டரை மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.20 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசு அறிவித்துள்ள அதிகபட்ச இழப்பீடே ரூ.3 கோடி மட்டும் தான். முறைப்படி வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டில் ஏழில் ஒரு பங்கு மட்டும் வழங்குவது மோசடியல்லவா?

இதுதவிர நிலங்களில் உள்ள பனை மரத்துக்கு ரூ.5,000, மா மரத்திற்கு ரூ.30,000, முதிர்ந்த தென்னை மரத்திற்கு ரூ.50,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுவும் பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டப்பட்ட பொய் ஆகும். கடந்த 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் கருகி பட்டுப்போயின. அவற்றுக்கு ஒரு மரத்திற்கு ரூ.3000 வீதம் இழப்பீடு வழங்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதுகுறித்து 10 மாதங்கள் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, இறுதியாக ஒரு தென்னை மரத்துக்கு 103 ரூபாய் இழப்பீடு அறிவித்தது. அப்படிப்பட்ட அரசு இப்போது அதை விட 500 மடங்கு அதிக விலை தருவதாக அறிவித்தால் அதை நம்புவதா, வேண்டாமா? என்பதை பொதுமக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

ரூ.10,000 கோடியில் பசுமை சாலை அமைக்கும் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் பணிகளுக்காக ரூ.3002 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நிலங்களுக்கான இழப்பீடு ரூ.2582 கோடி, அவற்றில் உள்ள வீடுகள், கடைகள், கோவில்கள் என 1171 கட்டிடங்களும், 104 சிறு கடைகளும் இடிக்கப்படுவதால் அவற்றுக்கான இழப்பீடாக ரூ. 23.68 கோடி, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் பணிகளுக்காக ரூ.448 கோடி, நிர்வாகம் உள்ளிட்ட பிற செலவுகளுக்காக ரூ.1.15 கோடி, அவசரத் தேவைகளுக்கான கூடுதல் நிதி ரூ. 392 கோடி ஆகியவை அடங்கும். கையகப்படுத்தப்படும் நிலங்களில் உள்ள பயிர்களுக்கான இழப்பீடுக்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், எங்கிருந்து தென்னைக்கு ரூ.50,000 வழங்க முடியும்? என்பதை பினாமி அரசு விளக்க வேண்டும். நிலத்திற்கான இழப்பீட்டில் பயிர்கள் மற்றும் மரங்களுக்கான இழப்பீடும் அடங்கும் என்பது தான் சாத்தியக்கூறு அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ள முடியும் உண்மையாகும்.

இதற்கெல்லாம் மேலாக அதிக விலை வழங்கப்படுகிறது என்பதற்காகவே தாயாகவும், தெய்வமாகவும் நேசித்து வந்த நிலங்களை விவசாயிகள் விட்டுக் கொடுப்பார்கள் என்று பினாமி ஆட்சியாளர்கள் நினைத்தால், அவர்களுக்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது என்று தான் பொருளாகும். முதலில் மிரட்டல், பின்னர் பணத்தாசை காட்டி நிலத்தை பிடுங்க முயலும் பினாமி ஆட்சியாளர்களுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. உழவுக்கு சாவுமணி அடிக்கும் பசுமைச் சாலைத் திட்டத்தை ஐந்து மாவட்ட உழவர்கள் முறியடிப்பார்கள்; அவர்களுடன் பா.ம.க.வும் இணைந்து போராடி வெற்றி பெறும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close