ஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை - ராமதாஸ்

ஏழைக் குடும்பத்து மாணவர்கள் கூட அரசு பள்ளிகளுக்கு பாடம் படிக்க வருவதில்லை

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு பள்ளிகளில் நிலை தொடர்பாக வெளியாகும் எந்த புள்ளிவிவரமும் திருப்தியளிப்பதாக இல்லை. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது ஒருபுறம் கவலையளிக்கும் நிலையில், அரசு பள்ளிகளின் மாணவர்கள் இடைநிற்றல் விகிதமும் வேகமாக அதிகரித்து வருகிறது.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறையின் திட்ட அனுமதி வாரியக் கூட்டத்தில் அரசு பள்ளிகளில் இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பது தொடர்பான இலக்குகளை எட்டத் தவறியது குறித்தும் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பதை தடுக்கத் தவறியது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அரை விழுக்காடாகவும், இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் ஒரு விழுக்காடாகவும் இருந்து வந்தது. கடந்த ஆண்டில் இதை முறையே 0.1 விழுக்காடாகவும், அரை விழுக்காடாகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது எட்டப்படவில்லை.

அதேநேரத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கான இடைநிற்றல் விகிதம் கடந்த ஆண்டில் 0.88 விழுக்காடு ஆகவும், இடைநிலைப் பள்ளிகளுக்கான இடைநிற்றல் விகிதம் 1.12% ஆகவும் அதிகரித்திருக்கிறது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட முறையே 8.8 மடங்கும், 2.24 மடங்கும் அதிகமாகும். இதுதவிர உயர்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 3.75% ஆகவும், மேல்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 1.69% ஆகவும் அதிகரித்திருக்கிறது. இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவாகும்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ.30 ஆயிரத்துக்கும் கூடுதலாக செலவழிக்கப்படுகிறது. இது மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கும் செலவழிக்கப்படும் ரூ.27,150-ஐ விட பத்து விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மடிகணினி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.1967.47 கோடி செலவிடப்படுகிறது. இதுதவிர கல்வி உதவித் தொகை ஆயிரக்கணக்கில் வழங்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக இடைநிற்றலைத தடுப்பதற்காக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பத்தாம் வகுப்பில் ரூ.1500, 11-ஆம் வகுப்பில் ரூ.1500, 12-ஆம் வகுப்பில் ரூ.2000 என ஒவ்வொரு மாணவருக்கும் மொத்தம் ரூ.5,000 சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டது. ஆனாலும், எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

இவ்வளவுக்குப் பிறகும் ஏழைக் குடும்பத்து மாணவர்கள் கூட அரசு பள்ளிகளுக்கு பாடம் படிக்க வருவதில்லை; வந்தாலும் தொடர்ந்து படிப்பதில்லை என்பதிலிருந்தே இலவசங்களையும், நிதியுதவியையும் தாண்டி வேறு ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டாமா? அந்தக் குறை என்ன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைக் களைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா? அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து பரப்புரை செய்வதன் மூலம் இடைநிற்றலைக் கட்டுப்படுத்தப் போவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு கூறியிருக்கிறது. வெறும் கைகளால் முழம் போடும் இந்த திட்டம் வெற்றி பெறாது. அரசு பள்ளிகளில் கட்டமைப்பு இல்லாமல் இத்தகைய பரப்புரைகள் பயனளிக்காது.

அரசு பள்ளிகளின் திறனையும், அவற்றின் ஆசிரியர்களின் கடமை உணர்வையும் நான் ஒரு போதும் குறைத்து மதிப்பிட மாட்டேன். கடமை உணர்வு கொண்ட சில ஆசிரியர்கள் தங்களின் சொந்தப் பணத்தைக் கொண்டும், தங்களின் முயற்சியில் நல்லெண்ணம் கொண்ட பெரிய மனிதர்களின் உதவிகளைப் பெற்றும் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளைவிட சிறப்பான கட்டமைப்புக் கொண்டதாக மாற்றியுள்ளனர். எந்தெந்த அரசு பள்ளிகளில் எல்லாம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வலிமையாக உள்ளனவோ, எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் கல்வித் தரம் சிறப்பாக உள்ளனவோ அந்த பள்ளிகளில் எல்லாம் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது; அவற்றில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

தனியார் பள்ளிகளில் கல்வித்தரம் இல்லாவிட்டாலும் கூட, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் பல ஏழைப் பெற்றோர்கள் கடன் வாங்கியாவது தங்களின் குழந்தைகளை அங்கு படிக்க வைக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இலவசங்களை வழங்குதல், நிதியதவி அளித்தல், பரப்புரை செய்தல் ஆகியவற்றின் மூலம் அரசு பள்ளிகளில் இடைநிற்றலை நிறுத்திவிடலாம் என்பது கனவாகவே இருக்கும். ஆனால், பயன் தராது. எனவே, இடைநிற்றலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்திகளை வகுக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கவேண்டும். அதன் பரிந்துரைகளை நேர்மையாக செயல்படுத்துவதன் மூலம் இடைநிற்றலை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close