லோக் அயுக்தா: ஊழல் ஒழிப்புக்கான புலியை எலியாக மாற்றிய பினாமி அரசு! – ராமதாஸ்

தங்களின் ஊழல்களையும் கண்டு கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் பொம்மை அமைப்பை உருவாக்கவே வகை செய்திருக்கிறது

By: July 10, 2018, 2:44:09 PM

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. லோக் அயுக்தா அமைப்பு எப்படி இருந்து விடக்கூடாது என்று அச்சம் தெரிவித்திருந்தேனோ, அதே போன்று தான் உருவாக்கப்படவிருக்கிறது. கோட்டையைக் காவல் காப்பதற்காக வலிமையும், வீரமும் மிக்க படைவீரனை நிறுத்துவதற்கு மாற்றாக சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தினால் எப்படி இருக்குமோ, அதேபோன்று தான் தமிழக அரசு உருவாக்கவுள்ள லோக் அயுக்தாவும் அமையும்.

உச்சநீதிமன்றம் விதித்த கெடுவாலும், பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அளித்து வரும் அழுத்தத்தாலும் லோக் அயுக்தாவை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான பினாமி அரசு, லோக் அயுக்தாவாகவும் இருக்க வேண்டும்; தங்களின் ஊழல்களையும் கண்டு கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் பொம்மை அமைப்பை உருவாக்கவே வகை செய்திருக்கிறது. தமிழக அரசு உருவாக்க உள்ள லோக் அயுக்தாவால் ஊழலை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை.

தமிழக முதலமைச்சரும் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் வருவார் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முதலமைச்சரும் ஓர் அமைச்சராகக் கருதப்படுவார் என்று 2(1)(ஐ)-பிரிவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் மட்டுமே முதலமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் படி லோக் அயுக்தாவை கோர முடியும். இந்த குழப்பத்தை முதலமைச்சர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓர் அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் தான். ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் அயுக்தாவுக்கு இல்லை. அதேபோல், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் அயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது. தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்து, அதில் முகாந்திரம் இருப்பதாக அவர் கருதினால் மட்டுமே அப்புகார் லோக் அயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். இவ்வாறு எந்த அதிகாரமும் இல்லாத லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு பதிலாக, ஊழலை சட்டப்பூர்வமாக்குவதாக அரசு அறிவித்து விடலாம்.

லோக் அயுக்தாவாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளும், லோக் அயுக்தாவை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படவுள்ள குழுவும் லோக் அயுக்தா குறித்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்க்கின்றன. லோக் அயுக்தாவாக நியமிக்கப்படுவர்கள் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவோ இருக்க வேண்டும் என்று கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கூட லோக் அயுக்தாவாக நியமிக்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஜெயலலிதாவை ‘இதயதெய்வமே வணங்குகிறேன்’ என்று பதாகை அமைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் உண்டு. அப்படிப்பட்டவர்கள் லோக் அயுக்தாவாக நியமிக்கப்பட்டு விட்டால் தமிழகத்தில் அரசு நிர்வாகம் என்ன ஆகும்? என்று நினைத்துப் பார்க்கவே மிகவும் அச்சமாக உள்ளது.

அதேபோல், முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் அடங்கிய குழு தான் லோக் அயுக்தாவை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் அபத்தமானதாகும். நீதித்துறையின் பிரதிநிதி இல்லாத லோக் அயுக்தா தேர்வுக்குழு நம்பத்தகுந்ததாக அமையாது. தேசிய அளவில் ஊழலை ஒழிக்கும் அமைப்பான லோக்பாலை தேர்வு செய்வதற்கான குழுவில் பிரதமர், மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, புகழ்பெற்ற வல்லுனர் என ஐவர் இடம்பெற்றிருப்பார்கள். இதன்மூலம் தகுதியான ஒருவர் மட்டுமே லோக்பால் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், நீதித்துறையினர் இல்லாத தேர்வுக்குழு அரசியல் குழுவாகவே அமையும்.

தமிழகத்தில் தகவல் உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இத்தகைய குழுவே தேர்ந்தெடுக்கிறது. இதற்கான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க முடியாத சூழலை உருவாக்கி ஆளுங்கட்சிக்கு சாதகமானவர்களை தேர்வு செய்வதே வழக்கமாக உள்ளது. திமுக ஆட்சியின் போது, தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபதியையும், அதிமுக ஆட்சியில் காவல்துறை தலைமை இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற இராமானுஜத்தையும், பின்னர் முதல்வரின் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஷீலாப்பிரியாவையும் நியமித்து தகவல் உரிமை ஆணையத்தை இரு கட்சிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டன. அதேபோன்று லோக் அயுக்தாவுக்கும் தங்களுக்கு சாதகமான ஒருவரை நியமித்து, வழக்கம் போல ஊழலை தொடரும் கொடுமை தான் நடக்கப் போகிறது.

இதற்கெல்லாம் மேலாக, லோக் அயுக்தாவில் தவறான புகார்களை அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஊழல்கள் குறித்து எவரும் புகார் செய்யக்கூடாது என்பதற்காகவே இத்தகைய மிரட்டல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஊழல் செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலியாக அமைய வேண்டிய லோக் அயுக்தா, ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சி ஓடும் எலியாக மாற்றப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக ஊழலை வளர்க்கும் இந்த அமைப்பை ஏற்க முடியாது. இதற்கு மாற்றாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட புதிய லோக் அயுக்தா சட்டத்தை பேரவையைக் கூட்டி நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ramadoss about lok ayukta

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X