Advertisment

சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா? - ராமதாஸ்

தனது தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாத அமைச்சர், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் குறைகளை எப்படி தீர்க்கப் போகிறாரோ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தனியார் சர்க்கரை ஆலைகள் குறித்து ராமதாஸ்

தனியார் சர்க்கரை ஆலைகள் குறித்து ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளின் உழைப்புச் சுரண்டலும், விலை நிர்ணய மோசடியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் சட்ட விரோதமானவை என்பது வெளிப்படையாக தெரிந்தும் அவை தொடர தமிழக அரசு அனுமதிப்பதும், அவற்றைத் தடுக்க முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

Advertisment

திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை, திருவிடைமருதூர் வட்டம் கோட்டூர் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றில் பணியாற்றும் 500-க்கும் கூடுதலான பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆலை ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை ஆகியவற்றை செலுத்துவதற்குக் கூட முடியாமல் வாடி வருகின்றனர். ஊதியத்தை நிலுவைத்தொகையுடன் வழங்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லாத சூழலில், இரு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களும் ஆலை வளாகங்களில் கடந்த 3-ஆம் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். ஐந்தாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில் இதுவரை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்குப் பிறகாவது அதை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசு எதையும் செய்யவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் பயனில்லை. மறுபுறம் சர்க்கரை ஆலை நிர்வாகம் பணியாளர்களின் குடியிருப்பில் மின் இணைப்பைத் துண்டிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.

தனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் தான் வழங்கப் படுகிறது. ஒரு மாத ஊதியம் சில நாட்கள் தாமதமாக வழங்கப்பட்டாலே அவர்களால் சமாளிக்க முடியாது. இத்தகைய சூழலில் 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் 500 குடும்பங்கள் தவித்து வரும் நிலையில், அவர்களின் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காணத் தவறியது மனித உரிமை மீறல் ஆகும். இத்தனைக்கும் சர்ச்சைக்குரிய சர்க்கரை ஆலைகள் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த தொகுதியில் உள்ளது. தனது தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாத அமைச்சர், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் குறைகளை எப்படி தீர்க்கப் போகிறாரோ?

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காதது மட்டுமின்றி சர்சைக்குரிய இந்த 2 சர்க்கரை ஆலைகளும் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.100 கோடி நிலுவைத் தொகையை இன்னும் வழங்கவில்லை. இந்த ஆலைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மொத்தமுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1347 கோடி நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை கடந்த ஆண்டு தீப ஒளித் திருநாளுக்குள் விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், நடப்பாண்டு தீபஒளித் திருநாள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வரவிருக்கும் நிலையில், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வசூலித்துக் கொடுக்க ஆட்சியாளர்கள் இதுவரை எதையும் செய்யவில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வசூலித்துக் கொடுப்பது அரசின் கடமை என்பதை மறந்து விட்டு, "நானும், தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்தும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் சேர்ந்து சர்க்கரை ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு நடத்திவிட்டோம். ஆனால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நிலுவைத்தொகை வழங்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டனர்" என்று அமைச்சர் துரைக்கண்ணு ஆட்சியாளர்களின் கையாலாகாதத்தனத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படியானால், தமிழகத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் அரசின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவையா அல்லது அவர்களிடமிருந்து கரும்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட உரிமைகளை பெற்றுத் தரும் திறன் தங்களுக்கு இல்லையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றின் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை தமிழக அரசு உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தீப ஒளி திருநாளுக்குள் அரசு பெற்றுத்தர வேண்டும். ஒரு வேளை அது சாத்தியமாகவில்லை என்றால், தமிழக ஆட்சியாளர்கள் தங்களின் இயலாமையை ஒப்புக்கொண்டு ஆட்சியிலிருந்து விலக வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment