Advertisment

பயனில்லாத விவாதங்கள்: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும்! - ராமதாஸ்

மக்களின் பிரச்சினையை பேச வேண்டிய மன்றத்தை சொந்தப் பிரச்சினையாக மாற்றியது தான் சாதனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பயனில்லாத விவாதங்கள்: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும்! - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த 22 நாட்களில் பயனுள்ள வகையில் ஏதேனும் விவாதம் நடைபெற்றதா? என்று சிந்தித்துப் பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு காலத்தில் பயனுள்ள, பரபரப்பான ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறும் மன்றமாக திகழ்ந்த தமிழக சட்டப்பேரவை இப்போது கூடிக் கலையும் மன்றமாக மாறியிருப்பது கவலையளிக்கிறது.

Advertisment

தமிழ்நாட்டை ஆட்சி செய்வதற்கும், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்துவதற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதியும், பெரும்பான்மையும் உள்ளதா? என்பது மில்லியன் டாலர் வினா. அதற்கான விடையை ஆளுனரிடமிருந்தும், உயர்நீதிமன்றத்திடமிருந்தும் பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம் தான் பினாமி ஆட்சி எனும் ஓட்டைக்கப்பலைக் கவிழாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எனினும், இதுகுறித்த விவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு, பேரவைக் கூட்டத் தொடர் எவ்வாறு நடத்தப்படுகிறது? என்பதைப் பார்த்தால், பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் வெட்கப்படும் அளவில் தான் உள்ளது.

மே மாதம் 29&ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் பேரவை நிகழ்ச்சிகளை புறக்கணித்து, மாதிரி சட்டப்பேரவையை நடத்துவதாக அறிவித்தனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அவர்கள் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் அவைக்கு வந்தனர். அதன் பின்னர் இன்று வரை முத்திரை பதிக்கும் வகையிலான ஒரு விவாதத்தைக் கூட திமுக முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், துணை முதலமைச்சரும் யாருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்று பல்வேறு தருணங்களில் விவாதித்து, ஒரு கட்டத்தில் தாம் நடிக்கச் சென்றிருந்தால் ஜெயலலிதாவுக்கு இணையாக நடித்திருப்பேன் என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் புளங்காகிதம் அடைவதில் வந்து முடிந்தது.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியத்தை வாங்க மாட்டோம் என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவரிடம் எழுதிக் கொடுத்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரோ, தங்களின் ஊதியத்தை விட செலவு அதிகமாகி விட்டதால், அதற்கான தொகையை அரசு கொடுக்க வேண்டும் என்று கோருகிறார். மக்களின் பிரச்சினையை பேச வேண்டிய மன்றத்தை தங்களின் சொந்தப் பிரச்சினையாக மாற்றியது தான் இவர்களின் சாதனை.

ஆளுங்கட்சியின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது. ஆளுங்கட்சியினர் துணைக் கேள்வி கேட்பதாக இருந்தால் கூட ஜெயலலிதா, எடப்பாடி, பன்னீர்செல்வம் வரை மூவரையும் போற்றும் புராணங்களை பாடிவிட்டுத் தான் தொடங்குகிறார்கள். இதனால் அவை நேரம் வீணாவதைப் பற்றிக் கவலைப்படாத பேரவைத் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு நிமிடம் கூடுதலாக பேச அனுமதி மறுக்கிறார். சாதாரண விஷயங்களைக் கூட 110 விதியின் கீழ் அறிவிக்கும் மோசமான கலாச்சாரத்துக்கு ஜெயலலிதாவுடன் முடிவுரை எழுதப்படும் என்று நம்பப்பட்ட நிலையில், எடப்பாடியும் அதேக் கலாச்சாரத்தை தொடருகிறார். ஜெயலலிதா முதமைச்சராக இருந்த போது, எடப்பாடி வகித்த துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அந்த அறிவிப்புகளை ஜெயலலிதா தான் வெளியிட்டார். முதலமைச்சரான நாளில் இருந்தே தம்மை ஜெயலலிதா ஆக கருதிக் கொள்ளும் பழனிச்சாமி, இப்போது ஜெயலலிதா போலவே மற்ற அமைச்சர்களின் துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் தாமே வெளியிடுகிறார். பேரவைக்கென தனியான நாகரிகம் உள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத முதலமைச்சரும், மற்ற உறுப்பினர்களும் பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவதைப் போன்றே முகம் சுளிக்கவைக்கும் மொழிகளில் மிகவும் கொச்சையாக பேசுகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது மக்களின் உரிமை ஆகும். பேரவையில் நடப்பதை அவர்கள் பார்த்து தெரிந்து கொண்டால் தான், தாங்கள் சரியான நபர்களைத் தான் தேர்ந்தெடுத்துள்ளோமா? என்பது குறித்து தன்னாய்வு செய்து கொள்வதற்கும், அடுத்து வரும் தேர்தலில் சரியான நபர்களை தேர்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும். இதற்கு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்பட வேண்டியது அவசியமாகும். அதை செய்ய அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

அவை நிகழ்ச்சிகள் அனைத்தும் இப்போதும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், ஆளுங்கட்சிக்கு சாதகமான பகுதிகள் மட்டுமே ஊடகங்களுக்கு அனுப்பி ஒளிபரப்பச் செய்யப்படுகின்றன. இதனால் ஆளுங்கட்சியினரின் தவறுகள் வெளியில் வராமல் மறைக்கப்படுகின்றன. அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதில் அரசுக்கு தயக்கம் ஏன்? என்பது தெரியவில்லை. அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்ட போது, அதன்வழியாக தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 7 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நாட்டில் பல மாநிலங்களில் அவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் அவை நிகழ்ச்சிகள் முழுமையாக பதிவு செய்து ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன. சில மாநிலங்களில் ஊடகங்களே ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் சட்டப்பேரவை ஜனநாயகம் குரல்வளை நெறிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறது.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் போது உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது ஒருபுறமிருக்க, உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயல்படுவர். எனவே, அடுத்தக் கூட்டத்தொடரிலிருந்தாவது சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து அறிவதற்கு வசதியாக அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tn Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment